தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவு.. பாலியல் வழக்கு பெண்கள் தொடர முடியாது? உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது, கவலைக்குரியதும் ஆகும் , குற்றவியல் நீதி எந்திரத்தை தவறாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு கசப்பான உறவையும் பலாத்கார குற்றமாக மாற்றுவது குற்றத்தின் தீவிரத்தை அற்பமாக்குவது மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழிக்க முடியாத களங்கத்தையும், கடுமையான அநீதியையும் ஏற்படுத்துகிறது என உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
திருமண வாக்குறுதியுடன் கூடிய காதல் உறவுகளில், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் போனால், பெண் தொடுக்கும் பாலியல் வழக்குகளை (குறிப்பாக 376, IPC பிரிவின் கீழ் வரும் பலாத்கார வழக்குகள்) அண்மைக்காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக கையாளுகின்றன. பல சமயங்களில், இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் ரத்து வருகின்றன.

நீதிமன்றங்கள் இந்த வழக்குகளைப் பரிசீலிக்கும்போது மையமாகக் கருதும் விஷயம் என்ன வென்றால் "சம்மதம்" பற்றியதாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, பாலியல் குற்றத்தில், சம்மதம் இல்லாத உறவே பலாத்காரமாக கருதப்படும். அதேநேரம் திருமண வாக்குறுதி சம்பந்தப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் இரு முக்கிய வேறுபாடுகளைக் கவனித்தே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
பாலியல் வழக்கு என்றால் என்ன
அதன்படி ஒரு ஆண், ஆரம்பம் முதலே பெண்ணைத் ஏமாற்றும் நோக்கத்துடன், அதாவது, அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி அளித்தால், அந்தச் சம்மதத்தை நீதிமன்றம் செல்லாது என்று கருதுகிறது. இது பாலியல் வழக்காக நீடிக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையே மாறியது
அதேநேரம் காதல் உறவின் தொடக்கத்தில், அந்த ஆணுக்கு உண்மையாகவே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், காலப்போக்கில் சூழ்நிலைகள், கருத்து வேறுபாடுகள் அல்லது வேறு காரணங்களால் அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.அது வெறும் உறவை முறித்துக் கொண்டதாக மட்டுமே கருதப்படும். இந்தச் சந்தர்ப்பங்களில், சட்டம் இதை பாலியல் குற்றமாகக் கருதவில்லை. ஏனெனில், உறவின் போது பெண் கொடுத்த சம்மதம் உண்மையானது என்று நீதிமன்றம் கருதுகிறது. இப்படித்தான் தீர்ப்புகள் வருகின்றன.ஒரு ஆணுடன் உறவில் இருந்துவிட்டு கசந்த உடன், அவர் மீது பாலியல் வழக்கு தொடுப்பதை தடுக்கவே இப்படியான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்து வருகிறது.
மகாராஷ்டிரா வழக்கு
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், வக்கீல் ஒருவருடன் 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி உள்ளார். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்ய வக்கீல் விரும்பி உள்ளார். ஆனால் அந்த பெண்ணின் முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணத்துக்கு பெண் மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் இருவரும் நெருங்கி பழகியதில் பெண் கர்ப்பமடைந்தார். பின்னர் அதை கலைத்தார். பின்னர் திருமணம் செய்ய வக்கீலிடம் வற்புறுத்தியபோது, அவர் மறுத்துவிட்டாராம். இதைத்தொடர்ந்து அவர் மீது சத்ரபதி சாம்ராஜ்நகர் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
பாலியல் வழக்கு ரத்து
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கில், புகாருக்குள்ளான வக்கீல் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் வக்கீல் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் தீர்ப்பில் கூறும் போது, இதுபோன்ற தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது, கவலைக்குரியதும் ஆகும் , குற்றவியல் நீதி எந்திரத்தை தவறாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.
களங்கம் ஏற்படுத்த முடியாது
ஒவ்வொரு கசப்பான உறவையும் பலாத்கார குற்றமாக மாற்றுவது குற்றத்தின் தீவிரத்தை அற்பமாக்குவது மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழிக்க முடியாத களங்கத்தையும்,, கடுமையான அநீதியையும் ஏற்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தது என்பதால், உண்மையான பாலியல் வன்முறை, வற்புறுத்தல் அல்லது சுதந்திரமான ஒப்புதல் இல்லாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் .
முத்திரை குத்த முடியாது
ஆண்-பெண் உறவின் போது ஏற்படும் உடல் ரீதியான நெருக்கத்தை, அந்த உறவு திருமணத்தை அடையத் தவறியதால், பின்னோக்கிப் பார்க்கும்போது பாலியல் வன்கொடுமை குற்றமாக முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பிக்கை மீறப்பட்டு கண்ணியம் மீறப்பட்ட உண்மையான வழக்குகளுக்கு சட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தோல்வியடைந்த அல்லது உடைந்த உறவுகளுக்கு குற்றச்சாயல் கொடுக்கப்படும் கவலையளிக்கும் போக்கை இந்த நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் கவனத்தில் கொண்டுள்ளது " இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications