ஹைகோர்ட்டில் தள்ளுபடி! சுப்ரீம் கோர்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு! அதிர்ச்சி அளித்த நீதிபதி!
டெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 20 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் (அக்டோபர் 16ல்) விசாரித்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் வாதிட்டார்.
வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும், வருமான வரி கணக்கில் இருந்தும், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகவும், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் காட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், மருத்துவ காரணங்களை கூறி ஜாமின் கேட்க முடியாது என்றும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாகியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும், சோதனைக்கு சென்று அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பான கடந்த சம்பவங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி, செந்தில்பாலாஜியின் ஜாமின் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் (அக்டோபர் 20) முடிவடைவதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்த நிலையில் இதுவரை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் உடல்நிலையை காரணம் காட்டி மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளையே அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கு மீது அக்டோபர் 30-ஆம் தேதி விசாரணை நடத்துவதாகவும் நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications