மணிப்பூர்: குக்கி பழங்குடிகளுக்கு ராணுவ பாதுகாப்பு கோரிய மனு டிஸ்மிஸ்- உச்சநீதிமன்றம்!
டெல்லி: மணிப்பூர் மாநில குக்கி பழங்குடிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மணிப்பூர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடரும் வன்முறைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மணிப்பூர் குக்கி பழங்குடிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, மணிப்பூர் குக்கி பழங்குடிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவைகளுக்கு இப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவும் இயலாது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அதேநேரத்தில் மணிப்பூர் மாநில மக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி பழங்குடிகளிடையே 2 மாதங்களாக மோதல்கள் தொடருகின்றன. இம்மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50000க்கும் அதிகமானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மத்திய, மாநில அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மணிப்பூர் மாநில பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களும் தாக்கப்பட்டன. மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. இதனால் மணிப்பூரில் 2 மாதங்களாக இணையசேவை முடக்கப்பட்டது. அண்மையில் மணிப்பூர் உயர்நீதிமன்றம், படிப்படியாக இணையசேவையை வழங்க அறிவுறுத்தியது. ஆனால் மணிப்பூர் மாநில அரசு இதனை ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் மாநில அரசு முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications