ஆமாவா? இல்லையா? ஹிஜாப் அணிபவர்களை “பள்ளி” செல்ல விடாமல் தடுக்கிறீர்கள் -உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: தேசிய ஒருமைபாட்டை காரணமாக சொல்லி நீங்கள் அவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கிறீர்களா என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 9 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

கூடுதல் தலைமை வழக்கறிஞர்
இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம்.நடராஜன், "பள்ளி என்பது மதசார்பற்ற இடம். மதசார்பற்ற செயலையே பள்ளியில் கற்க வேண்டும். அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே சீருடையில் வரவேண்டும் என்றும், மத அடிப்படையில் பிரிக்கக்கூடாது என்பது மட்டுமே விதியாக உள்ளது." என்றார்.

நீதிபதி கேள்வி
"அப்படியென்றால் இது சட்டத்தின் அடிப்படையில் சம பாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்களா? சட்டத்தின்படி சம பாதுகாப்பு வழங்குவதற்கு வேறு அர்த்தம் உள்ளது."என நீதிபதி துலியா கேள்வி எழுப்ப, வழக்கறிஞர் நட்ராஜ், "அரசு ஒற்றைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற மதசார்பற்ற நிறுவனங்களின் மீது யாரும் குறை சொல்ல முடியாது. இந்த காலத்திற்கு இது தேவை." என்றார்.

பள்ளி விடாமல் தடுக்கிறீர்களா?
இதனை கேட்ட நீதிபதி துலியா, "வேறு வார்த்தைகளில் சொல்லபோனால், தேசிய ஒருமைபாட்டை காரணமாக சொல்லி நீங்கள் அவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கிறீர்களா? என்று கேட்க, வழக்கறிஞர் "யாரையும் தடுக்கவில்லை. நாங்கள் எந்த மத அடையாளத்தையும் வெளிப்படுத்தக் கூடாது என்றுதான் சொல்கிறோம்." என்றார்.

ஆமாவா? இல்லையா?
இதனைக் கேட்ட நீதிபதி துலியா, "மொத்தமாக பார்த்தால், யாராவது ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர முயன்றால் நீங்கள் விட மாட்டீர்கள். ஆமாவா? இல்லையா? நீங்கள் ஏன் நேரடி பதிலை அளிக்க மறுக்கிறீர்கள்." என்று கேட்க பள்ளி அதை முடிவு செய்யும் என்றார் வழக்கறிஞர். அப்போது மற்றோரு நீதிபதி குப்தா, பள்ளியில் வெளியில்? என்று கேட்க மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஆம் என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications