எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீடு விவகாரம்.. மாநில அரசின் அதிகாரம் பற்றி ஆய்வு செய்யப்படும்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: இட ஒதுக்கீடு அளிப்பதற்காக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் மேலும் துணை வகைப்படுத்த (sub-classify) மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று 2004 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு சட்டப்பூர்வமாக செல்லுபடியாக கூடியதுதானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தரப்பு உள்பட 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர் கவி, விக்ரம்நாத், பீலா எம் திரிவேதி, பங்கஜ் மிதல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்த்ர மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக எஸ்.சி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ( பணிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006-ஐ பஞ்சாப் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த சட்டம் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் வால்மிகி மற்றும் Mazhabi சீக்கியர்களுக்கு அரசு பணிகளில் எஸ்.சி இட ஒதுக்கீட்டிற்குள் முன்னுரிமை அளிக்க வகை செய்தது. முன்னுரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 4(5) -ஐ பஞ்சாப் உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பஞ்சாப் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு, EV சின்னையா vs ஆந்திர மாநில அரசு இடையேயான வழக்கில் அளித்த தீர்ப்பை மீறும் வகையில், பஞ்சாப் அரசின் இடஒதுக்கீடு சட்டம் இருப்பதாகவும் எனவே இது அரசியலமைப்புக்கு எதிரானதாகவும் இருப்பதாக கூறி தள்ளுபடி செய்து இருந்தது.
இந்தநிலையில், தற்போது இந்த மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் போன்று எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குள் துணை பிரிவு ஏற்படுத்த அனுமதிக்கப்படுமா? என்பவை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை புதன்கிழமையும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications