அன்று “நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை தந்த கடவுளுக்கு நன்றி”! இன்று “கொடுமை”! சுப்ரீம் கோர்ட்டில் ருசிகரம்
டெல்லி: "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதியை தந்த கடவுளுக்கு நன்றி" என சில நாட்களுக்கு முன்பு சொன்ன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று, "இப்படி ஒரு நீதிபதி சொல்லலமா? கொடுமை" என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
பொன்முடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த 1996 -2001 கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் விழுப்புரத்திலும், அதன் பிறகு வேலூரிலும் விசாரிக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி, அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதுதொடர்பான விசாரணையை மறு ஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டினார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். விசாரணை மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனந்த் வெங்கடேஷ்: இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதியை மாற்ற வேண்டும் என்று பொன்முடி தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானே இவ்வழக்கை விசாரிக்கப் போவதாக கறார் காட்டினார். சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார்.
ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்குதான் நன்றி சொன்ன சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி: இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்தது சரிதான் என்ற தலைமை நீதிபதி அமர்வு, ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும் எனவும் அதிரடியாக கருத்து கூறினர். மேலும், பொன்முடி கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
இது பழைய கதை. ஆம், 2 மாதங்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு, "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும்" எனக் கூறிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியே நேற்று, "ஒரு நீதிபதி எப்படி இப்படி கூற முடியும்? கொடுமையாக இருக்கிறதே" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை கண்டித்துள்ளார். அதற்குக் காரணம், சிறார் பாலியல் படம் தொடர்பான வழக்கு.
ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை: குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 90'ஸ் கிட்ஸ் மது, புகைக்கு அடிமையாகி இருந்ததை போல 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
இப்படி ஒரு நீதிபதி சொல்ல முடியுமா? கொடுமை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று (மார்ச் 11) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒரு நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தை கூற முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ள கருத்து கொடுமையானது எனக் கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்தை 3 வாரத்துக்குள் திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்கவும் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு ஆனந்த் வெங்கடேஷை புகழ்ந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தற்போது கண்டித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications