செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கு.. முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!
டெல்லி: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2011- 2015 காலகட்டத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்தனர். அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சோதனையைத் தொடர்ந்து கடந்த 2023 ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்ததை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளியில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதேபோல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது.
ஜாமீன் - அமைச்சர் பதவி
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி அபய் எஸ் ஓகா அமர்வு நீங்கள் அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மெரிட் அடிப்படையில் அல்ல. பிரிவு 21ஐ மீறியதன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டது. விசாரணையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சராகப் பதவியேற்றதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்துகொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.
ஏற்காத உச்ச நீதிமன்றம்
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜியின் அதிகாரம், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இருந்தால் விசாரணையை மாநிலத்திற்கு மாற்றலாம் என கூறினார். அதற்கு நீதிபதி அபய் எஸ் ஓகா, உங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மூன்று முறை வாய்ப்புகள் வழங்கி இருந்தோம் ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறது. அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
செந்தில் பாலாஜி ராஜினாமா
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரியபோது, நீதிபதிகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதாவது இன்றைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றம் கடுமை காட்டிய நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.
இன்று மீண்டும்
உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.பதவியா? ஜாமீனா என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிவு விலகி பதில் அளித்து இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதம் வைத்தது.
செந்தில் பாலாஜியில் ஜாமீனை ரத்து செய்ய கோரும் அமலாக்கத்துறையின் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட அமைச்சராக கூடாது என்றும், டெல்லி முதல்வர் தலைமை செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும் என ED வாதம் வைத்தது. செந்தில் பாலாஜி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications