கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்! சுப்ரீம் கோர்ட் விதித்த "இரு" முக்கிய கட்டுப்பாடுகள் என்ன
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். இது தான் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் தான் கைதாகி ஓராண்டிற்கு மேல் சிறையில் இருக்கிறார். மேலும், பல முக்கிய தலைவர்களும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
கெஜ்ரிவால்: இறுதியாக டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தாலும் தொடர்ந்து டெல்லி முதல்வராக நீடித்து வருகிறார். அங்கிருந்து மக்களுக்குக் கடிதங்களையும் அனுப்பி வருகிறார்.
இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? ED பிடித்த பாயிண்ட்.. அதிரும் கெஜ்ரிவால் தரப்பு.. கோர்ட் நாளை முடிவு
இதற்கிடையே ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. லோக்சபா தேர்தலும் நடக்கும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அதற்கு அமலாக்கத் துறை மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த அபிடவிட்டில் கூட ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அமலாக்கத் துறை எதிர்ப்பு: சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற அமலாக்கத் துறை பிரசாரம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும் அரசியல் அமைப்பு படி இதற்கு சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்ற அமலாக்கத் துறை இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கூறியிருந்தது.
இன்று உத்தரவு: இந்தச் சூழலில் தான் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதாவது கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வரை ஜாமீன் கோரப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதி கைதான கெஜ்ரிவால் இத்தனை காலம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள்: கெஜ்ரிவால் பிரச்சாரத்திற்குச் செல்ல எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது. அதேபோல தலைமை செயலகத்திற்கும் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு அனைத்து தொகுதிகளுக்கும் வரும் மே 25ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக அங்குத் தனித்துக் களமிறங்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி 4 சீட்களிலும் காங்கிரஸ் 3 சீட்களிலும் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications