“சமுதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை” உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், கெஜ்ரிவால் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிபிஐ வழக்கி ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதங்கள் கவனம் பெற்றுள்ளன.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியிருந்தாலும், சிபிஐ வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே கெஜ்ரிவால் இன்றும் சிறையில் இருக்கிறார்.
சிபிஐ வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனு மீது பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் சிபிஐயின் கருத்துக்களை பெறாமல் உடனடியாக இடைக்காலப் பிணை வழங்க முடியாது என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தனர்.
விசாரணையில், கெஜ்ரிவால் தரப்பில் ஆஜராகியிருந்த அபிஷேக் மனு சிங்வி, முன்வைத்த வாதங்கள் கவனம் பெற்றுள்ளன. அதாவது,
"சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை. அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமீன் கிடைத்த பின்னர் சிபிஐ கைது செய்திருக்கிறது. கடந்த மே 10ல் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஜூலை 12ல் உச்ச நீதிமன்றம் விரிவான உத்தரவு வழங்கியுள்ளது. இந்த தேதிகளுக்கு இடைப்பட்ட நாளில் ஜெக்ரிவாலை CBI கைது செய்திருக்கிறது.
இந்த கைதுக்கான அவசியம் என்ன வந்தது? இந்த வழக்கில் கெஜ்ரிவால் தவிர அனைவரும் விடுதலையாகியுள்ளனர்" என சிங்வி சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications