சூடுபிடிக்கும் தமிழக அரசியல் சூழல்! அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு.. வியூகம் வகுக்கும் அண்ணாமலை?
டெல்லி: தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் விவகாரங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்திருக்கிறார்.
இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் எதையும் அவர் சொல்லவில்லை. இருப்பினும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கூட்டணி நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் அமித்ஷாவை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது அண்ணாமலை சந்தித்திருக்கிறார். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றிருக்கிறார். இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் பங்கேற்றிருக்கின்றனர்.
பாஜக தேசிய தலைமையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட பின்னர், அவருக்கு மத்திய அமைச்சர் அல்லது, தேசிய தலைமையில் இடம் வழங்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலையின் தேவை அதிகமாக இருப்பதாக தலைமை கருதியிருந்தது.
குறிப்பாக, கேரளாவில் தேர்தலுக்காக தயாராகி வரும் பாஜகவை மேற்பார்வை செய்ய அண்ணாமலை நிர்ணயிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில் இன்று அமித்ஷா இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இதில் தமிழக தேர்தல் நிலவரம் குறித்து அண்ணாமலையிடம் பாஜக தேசிய தலைமை விசாரித்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications