தமிழக பட்ஜெட் 2024 -25.. பிப்ரவரி 19ல் பொது பட்ஜெட்.. சட்டசபையில் வாசிக்க தயாராகும் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 2024-25 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க உள்ளதாக கூறினார். பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து, 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24ஆம் தேதி அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அதில், 9.1.2023 அன்று தொடங்கி நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர், இந்த அறிவிப்பாணை வெளியான தேதியோடு முடித்து வைக்கப்படுகிறது என்று ஆளுநர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டது.
ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழ்நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத்தொடருக்கான புதிய உத்தரவை, அரசு கேட்டுக் கொண்ட தேதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பிப்பார்.
இதனிடையே 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக இன்று சபாநாயகர் அப்பாவு கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட், வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார்.
பொது பட்ஜெட்டை தொடர்ந்து 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயர் அப்பாவு கூறினார்.












Click it and Unblock the Notifications