மகளிர் உரிமைத்தொகைக்கு செக்? உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய வார்த்தை..சிக்கல்தான்!
டெல்லி: அரசாங்கங்கள் தொடர்ந்து இலவசங்களை அள்ளி வழங்கும் போக்கு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும் என உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் உரிமைத்தொகையை பாஜக முடக்க பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், வங்கி கணக்கில் பணம் போடுவது குறித்து நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இலவசங்கள் வழங்கும் போக்கு எவ்வளவு காலம் தொடரும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும், அரசு கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கவலைகளை வெளிப்படுத்தியது.

என்ன வழக்கு?
தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜோய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின், 2024 மின்சார சட்டத் திருத்த விதிகளின் 23வது விதியை எதிர்த்து, தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று விசாரித்தது. இந்த விசாரணையின்போது, மாநில அரசு மின்சாரக் கட்டணங்களை தானே ஏற்றுக்கொள்வது இலவசமா என கேள்வி எழுப்பி, அது எவ்வாறு பொது நலனுக்கு உகந்ததாக இருக்கும்? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தது.
என்ன வேறுபாடு?
மாநில அரசின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமை நோக்கி, தலைமை நீதிபதி காந்த், "அரசு இத்தகைய செலவினங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது பொது நலனுக்கு உகந்ததா? இலவசங்கள் காரணமாக, ஒட்டுமொத்த நாடும் - நாம் தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை, அகில இந்திய அளவிலேயே பேசுகிறோம் - எந்த மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் திறன் கொண்டவர்களுக்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு?.
ஆதாயத்துடன் உதவி
மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் அரசு என்ற முறையில், ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், வசதி படைத்தவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் இலவசங்களை வழங்கத் தொடங்கினால், அது ஒருவித ஆதாயக் கொள்கையாக இருக்காதா? இது நாடு முழுவதும் நடக்கிறது. சில சமயங்களில் நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.
நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
நீங்கள் ஒரு வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும், பொது மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அந்தத் தொகையைச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, தேர்தல் நேரத்தில் உணவு, உடைகளைத் தொடர்ந்து விநியோகிப்பது... மக்கள் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
இது சரியான நேரம்
கல்வி கற்க வசதியில்லாத குழந்தைகள் உள்ளனர், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால், மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்.
ஆனால் வசதி உள்ள, அனைத்து வசதிகளையும் கொண்ட பணக்காரர்களுக்கும் இலவசமும் செல்கிறது. மாநிலங்கள் இந்த கொள்கைக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய இது சரியான நேரம் இல்லையா?
ஒரு சேவையைப் பெறுவதற்கு ஒருவர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை. இலாபம் ஈட்ட நீதிமன்றம் உத்தரவிடவில்லை, ஆனால் குறைந்தபட்சம் வசதி உள்ளவர்களிடமிருந்து செலவுகளை வசூலிக்க வேண்டும்.
பீகார் குறித்து பேசிய நீதிபதி
கடைசித் தேர்தல்கள் நடந்த இடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தலுக்கு அருகில் ஏன் திடீரென திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூகப் பொறியாளர்கள் அனைவரும் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய இதுவே சரியான நேரம். இந்த இலவச விநியோகங்களை நாம் தொடர்ந்து செய்தால், நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுவோம். ஒரு சமநிலை இருக்க வேண்டும். ஆனால் இது எவ்வளவு காலம் தொடரும்?.
நீண்டகால வளர்ச்சி
மாநிலங்கள் பற்றாக்குறையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், மக்களுக்கு இந்த வகையான பணத்தை விநியோகித்து வருவது கவலையளிக்கிறது. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அது வளர்ச்சி நோக்கங்களுக்காக ஏன் பயன்படுத்தப்படக் கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் விரும்பும் எதற்கும் நீண்டகாலத் திட்டம் வைத்திருக்கலாம்" என்று கூறிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை விட நீண்டகால வளர்ச்சித் திட்டங்களில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணம்
மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் சம்பாதித்து கண்ணியத்தையும் சுயமரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். காலையிலிருந்து இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் வழங்க ஆரம்பித்தால்... நீங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தைப் பரிமாற்றம் செய்கிறீர்கள். அப்படியானால் மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? ஒரு தளத்திலிருந்து அனைத்தையும் பெற முடியும் என்று தெரிந்தால், அவர்கள் எங்கிருந்து வேலை கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இலவசங்கள் தொடர்பான பிற மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தின் மனுவைப் பொறுத்தவரை, நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டதுடன், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications