வட இந்திய தொழிலாளர் வதந்தி- காஷ்யப் மீதான NSA வழக்கு சரிதான்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு
டெல்லி: வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது சரியான நடவடிக்கை; அதனை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக வாதிட்டது.
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வீடியோக்கள் மூலம் திடீரென வதந்தி பரவியது. இது தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு அரசு குழுவை அனுப்பி ஆய்வும் செய்தது.
இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைகளின் போது பாஜகவினரே திட்டமிட்டு பொய்யான இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டிருப்பது தெரியவந்தது. இத்தகைய வீடியோக்களை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.

இதன் ஒருபகுதியாக பீகாரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். காஷ்யப் மீது தமிழ்நாடு, பீகாரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் காஷ்யப் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மணீஷ் காஷ்யப் மீது ஏன் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மணீஷ் காஷ்யப் மீது ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு தரப்பு முன்வைத்தது. அப்போது, பொய்யான வீடியோ என தெரியும் பொய்யான தகவல்களுடன் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்தவர் காஷ்யப். வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யபப்டுவதாக பொய் தகவல் பரப்பினார். ஆகையால் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கை சரி என வாதிடப்பட்டது.












Click it and Unblock the Notifications