பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு, தமிழ் மக்கள் மீது இப்படியொரு பிணைப்பா.. ஆச்சர்யமான உண்மை
டெல்லி: தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. காசி தமிழ் சங்கமாக இருக்கட்டும், இப்போது நடக்கும் குஜராத் தமிழ் சங்கமம் ஆக இருக்கட்டும் தமிழர்கள் மீதான பிணைப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரையில் தமிழ்நாடு தான் அதிகம் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, "மனதின் குரல்" (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதுவரை ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் உரை வெளியாகி வருகிறது.. இதுவரை 99 உரைகள் முடிந்துள்ளன. நாளை மறுநாள் (ஏப்ரல் 30ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று 100-வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது.
இதுவரை ஒலிபரப்பப்பட்ட 99 உரைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் இதுவரையிலான உரையில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு, தமிழ் கலாசாரம், தமிழர்களின் தனித்திறன்கள் பற்றித்தான் அதிகம் எடுத்துக்கூறியுள்ளாராம்.
குறிப்பாக பிரதமர் மோடி கூறிய சில விஷயங்கள் அதிகம் பேரால் ஆச்சர்யத்துடன் பாராட்டப்பட்டது. அவை "உலகின் பழமையான மொழி தங்களது நாட்டைச் சேர்ந்தது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும்", "அழகான, உலக புகழ்பெற்ற மொழியை கற்கவில்லை என்பதில் வருத்தம் கொள்கிறேன்" மற்றும் திருக்குறளின் சிறப்பம்சங்கள். அவ்வையார் பாட்டு என்பன போன்ற தமிழ்மொழியை போற்றும் பல வாசகங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

இதேபோல் இந்திய ஜனநாயக மரபை உத்திரமேரூர் கல்வெட்டு அப்போதே எடுத்து இயம்பியதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமப்புற கலைகளை பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மேலும் வேலூரில் நாகை நதியை மீட்டெடுக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றுபட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயலை தடுத்து, மண்ணைக் காக்க பனைமரங்கள் நடுவது போன்ற பெண்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார். தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி பலமுறை புகழ்ந்துள்ளார். 'சுகன்யா சம்ரித்தி' திட்டத்தின் கீழ் 175 குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பெண்களுக்காக சுமார் 60 ஆயிரம் கணக்குகளைத்தொடங்கவும் முயற்சித்த கடலூர் மக்களின் முயற்சிகளை பாராட்டினார்.
சென்னையைச் சேர்ந்த சுசித்ரா ராகவாச்சாரியின் வேண்டுகோளை ஏற்று, குடிமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் கே.சி.மோகன் தனது மகளின் கல்விக்காக சேமித்த ரூ.5 லட்சத்தை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சேவைக்காக கொரோனா காலத்தில் செலவு செய்ததை குறிப்பிட்டு உள்ளார்.
பீடித் தொழிலாளி யோகநாதனின் மகள் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் பெற்றதை பாராட்டினார். தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதற்கு விவசாயிகளை பாராட்டியுள்ளார். தமிழகத்தின் வாழைப்பழங்கள், தஞ்சாவூர் பொம்மை போன்றவற்றை புகழ்ந்திருக்கிறார்.
இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ்நாட்டின் சிறப்புகளை பிரதமர் மோடி வானொலி உரையில் குறிப்பிட்டிருக்கிறார். வானொலியை தாண்டி, ஐநா சபை வரையிலும் தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் எடுத்துக்கூறியிருக்கிறார். அதேபோல் காசி தமிழ் சங்கம், குஜராத் தமிழ் சங்கமத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.












Click it and Unblock the Notifications