மருந்துகள் ஏற்றுமதி.. டாப் இடத்தில் குஜராத்.. பின்தங்கிய தமிழ்நாடு.. எந்த இடம் தெரியுமா!
டெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்தகப் பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு 9ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் ரொம்பவே முக்கியம்.. இறக்குமதியைக் குறைத்து எந்தவொரு அதிகளவில் ஏற்றுமதியைச் செய்கிறதோ.. அந்த நாடு தான் பொருளாதார ரீதியாக முன்னேறும்.

இந்தியாவிலும் ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மருந்து மற்றும் மருந்தக பொருட்கள் ஏற்றுமதியில் நாம் முக்கிய இடத்தில் இருக்கிறோம்.
மருந்துகள் ஏற்றுமதி: இதற்கிடையே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மருந்துகள் மற்றும் மருந்தகப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 2.08 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் மற்றும் மருந்தகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 2022-23இல் 5,725 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.4,904 கோடி மதிப்பிலான மருத்துவ பொருட்களைத் தமிழ்நாடு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இப்போது அதன் ஏற்றுமதி 2.75 சதவிகிதம் அதிகரித்து ரூ. 5,725 கோடியாக இருக்கிறது. மருத்துவம் சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா தேசியளவில் 9ஆவது இடத்தில் இருக்கிறது.
டாப் இடத்தில் குஜராத்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது குஜராத் மாநிலத்தில் இருந்து 42,968 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் இருந்து தான் அதிகபட்ச அளவிலான மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. குஜராத்திற்கு அடுத்தபடியாக நமது அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருந்து 39,196 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இதே காலகட்டத்தில் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் ஏற்றுமதி குறித்த தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக 9,922 கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆந்திரா மாநிலம் 5,603 கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் 1975 கோடி ரூபாய் ஏற்றுமதி உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
புகையிலை பொருட்கள்: புகையிலை ஏற்றுமதியைப் பொறுத்தவரைக் கடந்த கடந்த 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு 530 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து 127 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அது இப்போது ஒரே ஆண்டில் 317% அதிகரித்து ரூ. 530 கோடி மதிப்பிலான ஏற்றுமதியாக இருக்கிறது.
சர்வதேச அளவில் மருந்துகள் ஏற்றுமதியில் நாம் முக்கிய இடத்தில் இருக்கிறோம். கொரோனா காலத்தில் கூட உலகிற்குத் தேவையான கொரோனா வேக்சின்களை நாம் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்திருந்தோம். இப்போது கொரோனா வேக்சின் ஏற்றுமதி குறைந்தாலும், கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு இந்தியாவில் இருந்து தான் அதிகளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளுக்கும் பல இந்திய நிறுவனங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications