நீ வேணா சண்டைக்கு வா.. எல்லையில் தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான்! ஒட்ட நறுக்க தயாரான இந்திய வீரர்கள்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடைபெற்ற நாளில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இன்றும் ஆறாவது நாளாக பாரமுல்லா குப்வாரா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக். ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்திருக்கும் நிலையில் தற்போது எல்லை பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி வாங்க எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு என இந்தியா அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. பாகிஸ்தானுக்கு பதில் அடி கொடுக்க தயங்க வேண்டாம் எனவும் ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியில் கடும் பரபரப்பு நிலவும் நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் ஏவுகணை சோதனை, விமான படைகளை நிலை நிறுத்துவது, ராணுவ வீரர்களை குவிப்பது என தீவிரம் காட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க காஷ்மீர் தாக்குதல் நடந்த நாளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தற்போது ஆறாவது நாளாக பாரமுல்லா, குப்வாரா ஆகிய பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.
கை துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட சிறிய வகை ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாக்., ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிரடி நடவடிக்கைகள் எல்லை பகுதியில் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்ப தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications