வெள்ளத்தடுப்புக்காக சென்னைக்கு இவ்வளவு நிதியா? திமுக எம்பி கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
கன்னடியன் கால்வாயில் இருந்து வறட்சி பாதித்த பகுதிக்கு வெள்ளநீரைக் கடத்தும் கால்வாய் அமைத்தல் திட்டத்திற்காக ரூ.44.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற பணிகளுக்கு மத்திய அரசு ஏதேனும் திட்டங்களை வகுத்து இருக்கிறதா? என்றும் அப்படி வகுத்திருப்பின் அதற்கென எவ்வளவு நிதி ஒதுக்கீடு? செய்யப்பட்டிருக்கிறது என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரிராஜன் கேள்வியெழுப்பியிருந்தார். இக்கேள்விக்கு மத்திய அரசு தற்போது பதிலளித்துள்ளது.

திமுக எம்பி கிரிராஜன் சென்னையில் மத்திய அரசு சார்ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், 'சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவது போன்ற ஏதாவது திட்டங்களை அரசு வகுத்திருக்கிறதா, அப்படியானால் அது குறித்த விவரங்கள், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, அதில் விநியோகிக்கப்பட்ட தொகை மற்றும் தமிழ்நாடு அரசு 2017ம் ஆண்டு தொடங்கி வருட வாரியாக அதற்காக செலவிட்ட தொகை ஆகிய தகவல்கள் மற்றும் சென்னை நகரத்துக்கான திட்டங்களின் பட்டியல் மற்றும் அவை குறித்த விவரங்கள் என்னென்ன' என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், "வெள்ள மேலாண்மை திட்டத்தின் (FMP) கீழ் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் நதிநீர் மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு, வெள்ள நீரைக்கட்டுப்படுத்துதல், நில அரிப்புத் தடுப்பு வடிகால் மேம்பாடு, வெள்ள தடுப்பு பணிகள், சேதமடைந்த வெள்ள மேலாண்மையை பணிகளை மீண்டும் மேற்கொள்ளுதல், பணிகள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி சுத்திகரிப்பு தொடர்பான பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசு உதவி வழங்கி வருகிறது.
பணிகள்
ஜல் சக்தி அபியான் வருடாந்தர பிரச்சாரங்களின் கீழ் மற்றவற்றுக்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால், மேற்கொள்ளப்பட்ட கவனத்தோடு கூடிய இடையீட்டு முயற்சிகளில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளும் அடங்கும். நிலத்தடி நீரை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் பூமிக்கடியிலான அணைகள், மண் அணைகள், கட்டுப்பாட்டு அணைகள், தடுப்பு அணைகள் போன்ற கட்டமைப்புகள் மற்றும் பொது கட்டிடங்களில் கூரை மேல் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் போன்ற இயற்கை வள ஆதார மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பு கட்டமைப்புக்கள் தொடர்பான பொதுப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGS) நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கான திட்டம்
தமிழ்நாட்டில் 'திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆறுகளை இணைக்கும் திட்டம் அதாவது கன்னடியன் கால்வாயில் இருந்து வறட்சி பாதித்த பகுதிக்கு வெள்ளநீரைக் கடத்தும் கால்வாய் அமைத்தல்' திட்டம் 2021-22 நிதியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட மத்திய உதவித்தொகை ரூ.44.22 கோடி ஆகும். இதில் ரூ.9.04 கோடி 2021-22ல் விடுவிக்கப்பட்டு அது பயன்படுத்தப்பட்டுவிட்டது.
சென்னைக்கு எவ்வளவு?
நீர்நிலைகளைப் பழுது பார்த்தால், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இப்பணிகளுக்காக எட்டு நீர்நிலைத் தொகுப்புக்களுக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நீர்நிலைத் தொகுப்புக்களுக்கான இத்திட்டத்தின் கீழ் 2017 ஆண்டு முதல் மத்திய அரசு ரூ.186.53 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு
1. 2017-18 - இல்லை
2. 2018-19 - ரூ. 7.03 கோடி
3. 2019-2020- ரூ. 16.75 கோடி
4. 2020-21 - ரூ. 1.25 கோடி
5. 2021-22 - ரூ. 17.43 கோடி
6. 2022-23 (இன்று வரை) - ரூ. 19.3 கோடி
அதேபோல இந்த அமைச்சகம் அது சேவை செய்யும் திட்டங்களின் கீழ் சென்னை நகரம் தொடர்பான நிதியுதவி கோரி எந்த முன்மொழிவையும் பெறவில்லை" என்று மத்திய இணையமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications