செந்தில் பாலாஜி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு.. சென்னை போலீஸின் கோரிக்கையால் பரபரப்பு
டெல்லி: ஒட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2016 -17களில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு மேல்முறையீடாக உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து மாநில அரசு விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இது ஒருபுறம் எனில் அமலாக்கதுறை செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கைது செய்தது. தற்போது உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமலாக்கத் துறையினருக்கு காவல்துறையினர் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தான் அப்பாவி என நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளது எனவும், விசாரணைக்கு தடை ஏற்படுத்த முடியாது என்றும், அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் அமலாக்கத்துறை விரைவில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் என தெரிகிறது.
இதனிடையே உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கூறியிருந்த நிலையில், விசாரணையை முடிக்க 6 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் இன்று (ஜூலை 14ம் தேதி) இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 16ம் தேதி வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவினை இந்த வழக்கில் சேர்ப்பதற்காக சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார், வழக்கு நடந்து விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி 318 சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் இதுவரை 152 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
முறைகேடு நடந்ததாக கூறப்படும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தமிழக போக்குவரத்து துறையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2974 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த நபர்களின் பணியாணை தொடர்பாக விரிவாக விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மாநகர போக்குவரத்து துறையில் சேர்ந்த 901 ஓட்டுநர்கள், 902 நடத்துனர்கள், 271 உதவிநிலை பணியாளர்கள் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
அதேவேளையில் சாட்சிகளாக உள்ள பலர் தங்களது முகவரியை மாற்றி சென்றுவிட்டார்கள். இதன்,காரணமாக அவர்களை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக இருக்கிறது. மேலும் இந்த முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் பணியாளர்கள் தேர்வு செய்த 30 மாநகர போக்குவரத்து அதிகாரிகள் யார் என்பது தொடர்பாகவும், அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தையும் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
அதேபோல, பணியமர்த்தப்பட்ட நபர்களை விட அதிக மதிப்பெண் பெற்ற 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியது இந்த வழக்கில் அவசியமாகிறது. இவர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் 901 ஓட்டுநர்கள், 902 நடத்துனர்கள், 271 உதவிநிலை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பான 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆராய்ந்து வருகிறோம்.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்கு, பணம் கொடுத்தவர்களிடம் உள்ள ஆதாரம், மின்னணு ஆதாரம், தேர்வு குழுவிடம் உள்ள மதிப்பெண் விவரம், பணியமர்த்தப்பட்டவர்கள், பணி நிராகரிக்கப்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை தீவிரமாக ஆராய வேண்டியதிருக்கிறது.
இவை அத்தனையும் முடித்து, விசாரணையையும் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.எனவே, இந்த நடவடிக்கைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த இடையீட்டு மனுவில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் கோரிக்கை வைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications