உச்சநீதிமன்ற நீதிபதியாகும் தமிழக சீனியர் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன்! 2030ல் தலைமை நீதிபதி?
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்திற்கு புதியதாக இருவரின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஒருவர் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரஷாந்த் மிஸ்ரா, மற்றொருவர் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன். இதில் கே.வி.விஸ்வநாதன் வரும் 2030ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதனையடுத்து மேலும் 4 நீதிபதிகள் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதனால் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32லிருந்து 28ஆக சரிந்துவிடும். எனவே புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் சமீப காலமாக ஆலோசனை செய்து வந்த நிலையில், தற்போது ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரஷாந்த் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை நீதிபதிகளாக தேர்ந்தெடுக்க பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையின்படி விஸ்வநாதன் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் 2030ம் ஆண்டு இவர்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். இவருக்கு முன்னதாக இவரது சீனியர் ஜே.பி.பார்த்திவாலாவின் பணிக்காலம் 2030ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் கே.வி.விஸ்வநாதனின் பணிக்காலம் 2031ம் ஆண்டுதான் நிறைவடைகிறது. எனவே சீனியாரிட்டி அடிப்படையில் இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்க வாய்ப்பிருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து மாற்றுக்கருத்து நிலவி வருகிறது. நீதித்துறை நீதி வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீதிபதிகளை நியமிப்பதை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து கூறிவருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த அவர், "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது.
அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. ஆனால் தற்போது கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதனை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சகோதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று கூறியிருந்தார்.
மேலும், "நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையானது 5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது நீதிபதிகள் சக நீதிபதிகளை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே நீதிபதிகள் நீதி வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். இத்துடன் நில்லாமல் இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதில்,
"கடந்த 25 ஆண்டுகளாக கொலீஜியம் முறையின் கீழ் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. எனவே கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க அரசு பரிந்துரைக்கிறது" என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications