18 வயதுக்கு மேல் அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ்..? சிரமங்களை தவிர்க்க மத்திய அரசு பரிசீலனை..!
டெல்லி : உலகின் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு மற்றும் சர்வதேச பயணத்தின் போது எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை அனுமதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உலக நாடுகள் செலவு செய்து தங்கள் மக்களுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் தற்போது தடுப்பூசி வழங்குவதற்காகவும் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள். தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடும் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் இதுவரை1,79,44,59,673 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக சிலர் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது இடங்களில் அனுமதி, பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பூஸ்டர் டோஸ்
இந்நிலையில் உலகின் சில பகுதிகளில் நோய் தொற்று அதிகரிப்பு மற்றும் சர்வதேச பயணத்தின் போது எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா இந்த ஆண்டு மார்ச் 16 முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடத் தொடங்கியது.

தடுப்பூசி இயக்கம்
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடைநிலை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கியது. அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

விரிவுபடுத்த முடிவு
கடந்த ஆண்டு மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி போட அனுமதிப்பதன் மூலம் அதன் தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்தது. கோவிட் தடுப்பூசியின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்குத் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 10 முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications