தி கேரளா ஸ்டோரிக்கு தடை கோரும் மேல்முறையீட்டு மனு- மே 15-ல் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!
டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை கோரும் மேல்முறையீட்டு வழக்கை மே 15-ந் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றி, ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் பாலியல் அடிமைகளாக அனுப்புகின்றனர் என்பதை சொல்லுகிறது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். இது கேரளாவில் மட்டுமல்ல நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இதனால் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் கேரளா ஸ்டோரிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முதலில் மறுத்தது. பின்னர் மீண்டும் மீண்டும் முறையிடப்பட்டதால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்தது. ஆனால் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. அத்துடன் கேரளா உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

பின்னர் கேரளா உயர்நீதிமன்றத்திலும் இப்படம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் முடிவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்தது கேரளா உயர்நீதிமன்றம். இதனால் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் வன்முறை வெடிக்கும் சூழ்நிலை உருவானதால் திரைப்படத்தை வெளியிட மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படவில்லை. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை திரையிட மறுத்தனர்.
இந்நிலையில் கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. வரும் 15-ந் தேதி இம்மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications