நாடாளுமன்றம் இன்று கூடுகிறது... எதிர்க்கட்சிகள் மெகா திட்டம்.. மத்திய அரசு தந்த உறுதி
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியினர் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த விரும்பும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் உறுதி அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட சில நாட்கள் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கூடி பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து புதிய சட்ட மசோதக்களையும், தீர்வுகளையும் வைப்பார்கள். அந்த வகையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடர், ஆகஸ்டு 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெற உள்ளது.

மழைக்காலக் கூட்டத்தொடர்
இந்த கூட்டத்தொடர் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடைபெறுகிறது. ஏனெனில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். அதன் தொடர்ச்சியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு சண்டை நிறுத்தம் செய்ததாக அறிவித்தது, பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் நடைபெறும் மிகப்பெரிய சீர் திருத்தம் போன்றவை குறித்து 'இந்தியா' கூட்டணி பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப வாய்ப்பு உள்ளது.
இந்தியா கூட்டணி
வழக்கமாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் ஆளும் கட்சிகள் தனியாகவும், எதிர்க்கட்சிகள் தனியாகவும் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்குவார்கள். அதுபோல், 24 எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் சொன்னது, உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழு பயணம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் உள்பட 8 பிரச்சனைகளை எழுப்ப இந்தியா கூட்டணி முடிவு செய்தது.
மத்திய அரசு ஆலோசனை
இதுபோல், ஆளுங்கட்சியான பாஜக தரப்பில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் மூத்த மத்திய அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றி விவாதித்தனர். அதேபோல ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும், மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துவது வழக்கம். அந்த வகையில் மத்திய அமைச்சரும், ராஜ்யசபாவின் முன்னவருமான ஜே.பி.நட்டா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் யார் யார்
மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன்ராம் மேக்வால், காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகாய், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) சார்பில் சுப்ரியா சுலே, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தலைவரும், மத்திய அமைச்சருமுன ராமதாஸ் அத்வாலே, சிவசேனா சார்பில் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்
இந்த கூட்டத்தில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, பஹல்காம் தாக்குதல், சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். இந்த பிரச்சனைகள் உள்பட அனைத்து பிரச்சனைகள் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயந்து ஓட மாட்டோம்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை கண்டு மத்திய அரசு பயந்து ஓடாது என்றும், நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றும், குறைந்த எம்.பி.க்கள் கொண்ட கட்சிகளுக்கும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு குறித்துக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 மசோதாக்கள்
இதனிடையே பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் அவர் வெளிநாட்டு பயணம் இல்லாத நாட்களில், நாடாளுமன்றத்தில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 17 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது. அதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications