'இம்யூன் எஸ்கேப்'.. நாட்டில் கொரோனா அடுத்த அலை இதனால் தான் ஏற்படும்.. தடுக்க இருப்பது ஒரே வழிதான்
டெல்லி: நாட்டில் கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்திருந்தாலும்கூட, தற்போது டெல்டா கொரோனா மேலும் டெல்டா பிளஸ் ஆக உருமாற்றம் அடைந்துள்ளதால் ஆபத்து இன்னும் முழுவதுமாக அகலவில்லை.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு சுமார் 3 முதல் 4 மாதங்கள் வரை நீட்டித்தது. இந்த காலகட்டத்தில் உயிரிழப்புகளும்கூட அதிகரித்தது.

தவறான முன்னுதாரணம்
நாட்டில் வைரஸ் பாதிப்பின் 2ஆம் அலை ஏற்படப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் 2 விஷயங்கள் முக்கியமானது. முதலில் நாட்டிலுள்ள தலைவர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் கொரோனா அச்சம் முடிந்துவிட்டதாகவே கருதினார். முக்கிய தலைவர்கள் பொது இடங்களில் அதிக கூட்டத்தில் மாஸ்க்களைகூட அணியாமல் பிரசாரங்களையும் மேற்கொண்டனர். இது தவறான முன்னுதாரணமாக அமைய, மக்களும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் இருந்து விலக தொடங்கினர்.

மிக மோசம்
இத்துடன் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாவும் சேர்ந்து கொண்டது. இதனால் வைரஸ் பாதிப்பு பல மடங்கு வேகமாக அதிகரித்தது. இதனால் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. ஒரு புறம் கொரோனா மறுபுறம் மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்சிஜன் இல்லை என மிக மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

கட்டுக்குள் வந்தது
உச்சத்தில் இருந்து 2ஆம் அலை ஜூன் மாதத்தில் தான் குறையத் தொடங்கியது. தினசரி வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து இப்போது தான் 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்பதற்காகவே டெல்டா கொரோனாவின் அச்சுறுத்தல் முழுமையாக அகன்றுவிட்டது என்று அர்த்தமில்லை. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நாம் வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

டெல்டா கொரோனா
டெல்டா கொரோனா வகை மற்ற அனைத்து கொரோனா வகைகளையும்விட வேகமாகப் பரவுகிறது. இது தீவிர பாதிப்பை அதிகப்படுத்தி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. இந்தச் சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான மாபெரும் ஆயுதம். டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின்களின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும்கூட அவை உயிரிழப்புகளைத் தடுக்கிறது.

புதிய ஆய்வு
ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கொரோனா வேக்சின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு டெல்டா கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதாவது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் பத்திரமாக உள்ளனர். எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்களுக்கு வேக்சின் 2 டோஸ்களையும் நாம் செலுத்த வேண்டும். இதற்காகன தான் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் 2 டோஸ்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறன்றன.
Recommended Video

இம்யூன் எஸ்கேப்
இப்போது இந்த டெல்டா கொரோனா, டெல்டா பிளஸ் கொரோனா வகையாக உருமாற்றம் அடைந்துள்ளது. இது இம்யூன் எஸ்கேப் என்ற ஆற்றலைப் பெற்றுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடல்களில் ஆன்டிபாடிகள் தோன்றும். அந்த ஆன்டிபாடிகள் மீண்டும் கொரோனா நம்மைத் தாக்குவதிலிருந்து காக்கும். இருப்பினும் டெல்டா கொரோனா அதிலிருந்தும் தப்பிப்பதாகத் தெரிகிறது. அதாவது வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கும்கூட மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் கொரோனா அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன செய்யலாம்
ஆனால், வேக்சின்கள் இதற்கு எதிராகப் பலன் அளிப்பதாகவே தெரிகிறது. எனவே, குறைந்த காலத்தில் வேக்சின் பணிகளை முடிக்க வேண்டும். நாட்டில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் சில தடுப்பூசிகளுக்கும் வரும் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனாவால் நாட்டில் 3ஆம் அலை ஏற்படும் ஆபத்து உள்ளது என்றாலும்கூட வேக்சின்கள் மூலம் அதை நம்மால் தடுக்க முடியும்..












Click it and Unblock the Notifications