உக்ரைன் போருக்கு இடையே.. ரஷ்யா செல்கிறார் மோடி! புதினுடன் முக்கிய பிரச்னைகளை பேச உள்ளதாக தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் 8ம் தேதி ரஷ்யா பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின்போது அதிபர் புதினை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் தலைவர்களை புதின் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். உலக அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீண்டும் வலுவாக நிலை நிறுத்திக்கொள்ளவே இந்த சந்திப்புகள் நடப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த 19ம் தேதி வடகொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்-ஐ புதின் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. காரணம் கிம் ஜோங் வெளிப்படையாகவே ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிரான லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி வியாட்நாமுக்கு சென்றிருந்த புதின், தலைநகர் ஹனோயில் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார். வியட்நாமுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 1950லிருந்து நட்பு நீடித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக வியட்நாம் 'மூங்கில் ராஜதந்திரத்தை' கடைபிடித்து வருகிறது. அதாவது, இது மற்ற நாடுகளுடன் கொள்ளும் உறவு வலுவாகவும், உறுதியாகவும் இருக்கும். ஆனால் நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும்.
இப்படியான உறவைதான் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வியட்நாம் கடைபிடித்து வருகிறது. தொழில்நுட்ப துறையில் வியட்நாமின் வளர்ச்சி, தற்போது ரஷ்யாவை அந்நாட்டின் பக்கம் ஈர்த்திருக்கிறது. எனவே ரஷ்யா வியட்நாமுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இன்று நடந்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி-புதின் சந்திப்பு நிகழ உள்ளது. வரும் ஜூலை மாதம் 8ம் தேதி மோடி ரஷ்யாவுக்கு பயணிக்க இருக்கிறது என்றும், இந்த பயணத்தின்போது இருவரும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாட இருக்கின்றனர்.
தற்போது உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்களை புதின் சந்திப்பதற்கு பின்னணியில் ஆயுத பரிமாற்றங்கள் இருக்கலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது. என்னதான் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி இருந்தாலும் ரஷ்யா உறவை இந்தியா விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications