அந்த மனசுதான் சார் கடவுள்.. திருட போன வீட்டில் ஒன்னுமே இல்லை.. 500 ரூபாயை போட்டுவிட்டு சென்ற திருடன்
டெல்லி: திருடுவதற்காக வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒருவன் வீடு முழுக்க அலசி ஆராயந்த போதும் ஒரு பொருளும் கிடைக்காததால் 500 ரூபாயை போட்டு விட்டு சென்ற வினோத சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் செக்டர்- 8 ல் உள்ள ஒரு வீட்டில் ராமகிருஷ்ணன் என்ற முதியவர் வசித்து வருகிறார். 80 வயதான இவர் ஓய்வு பெற்ற என்ஜினியர் ஆவார். இந்த வீட்டில் தனது மனைவியுடன் ராமகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர்களது மகன் குருகிராமில் வசித்து வருகிறார். அவ்வப்போது தனது மகன் வீட்டிற்கு ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று விட்டு வருவது வழக்கமாம்.

அந்த வகையில் தான் கடந்த 20 ஆம் தேதி தனது மனைவியுடன் மகனை பார்ப்பதற்காக ராமகிருஷ்ணன் புறப்பட்டு சென்றார். மகன் வீட்டில் இருந்த ராமகிருஷ்ணனுக்கு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் திடீரென போன் செய்தார். போனை எடுத்து ராமகிருஷ்னன் பேசிய போது, உங்கள் வீட்டில் இரவில் திருடன் புகுந்து இருப்பதாகவும் லாக்கர்கள் உடைந்து இருப்பதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் அவசர அவசரமாக கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டில் உள்ள மெயின் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. பதற்றத்தோடு போய் பார்த்த ராமகிருஷ்ணனுக்கு அங்கு ஆச்சர்யம் தான் காத்திருந்தது. வீட்டில் அலமாரி எதுவும் உடைக்கப்படவில்லை. வீட்டில் எந்த ஒரு பொருளுமே திருடுவதற்கு கிடைக்கவில்லை என்பதால் அப்படியே அதை விட்டு விட்டு சென்றதாக தெரிகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் வீட்டின் மெயின் கேட் அருகே ஒரு 500 ரூபாய் தாளும் கிடந்தது.
இதைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்தாலும் போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் திருடன் புகுந்தது குறித்து புகார் அளித்தார். இந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் திருட போன போது எதுவுமே இல்லையே என பரிதாபப்பட்டு 500 ரூபாய் தாளை திருடன் போட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருட சென்ற வீட்டில் எதுவுமே இல்லை என்பதற்காக பரிதாபப்பட்டு 500 ரூபாய் தாளை திருடன் போட்டு சென்றானா? அல்லது தவறுதலாக தவற விட்டானா? என தெரியவில்லை என்று நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், வீட்டில் காசு இல்லை என்பதால் இரக்கப்பட்டு 500 ரூபாயை வேண்டும் என்றே திருடன் போட்டுவிட்டு சென்று இருக்கலாம் எனவும் சில நெட்டிசன்கள் பதிவிட்டு அந்த மனசுதான் கடவுள் என்ற ரீதியில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications