Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்த கோளறு பதிகம்...இத்தனை மகிமையா? பாடினால் என்ன பலன்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஓதுவார்கள் கோளறு பதிகம் பாட புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்தால் அப்போதய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் 19 ஆதீனகர்த்தர்கள் செங்கோல் வழங்க அதை சபாநாயகர் இருக்கை முன்பாக நிறுவியுள்ளார் பிரதமர். கோளறு பதிகம் பாடினால் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்ற பார்க்கலாம்.

கோளறு பதிகம் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்.
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்றுதான் கோளறு பதிகம்.

Thirugnanasambandar Kolaru Pathigam Power Appeasing the Navagrahas

ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார். ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அதனால் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர். பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.


பாடல் 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் - 2

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் - 3

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.


பாடல் - 4

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் - 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பாடல் - 6

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் - 7

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் - 8

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

Thirugnanasambandar Kolaru Pathigam Power Appeasing the Navagrahas

பாடல் - 9

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் - 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

கோளறு பதிகம் பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

இந்த கோளறு பதிகம் பாடினால் தீராத நோய்கள் தீரும். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. நவகிரகங்களினால் ஏற்பட்ட தோஷம் நீங்க கோளறு பதிகம் பாடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+