என்ன நடக்குது? பிரதமர் மோடியின் கல்வி சான்று கேட்டால் அபராதமா? கொதித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சான்றிதழ்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் விரக்தி அடைந்த நிலையில் ‛‛பிரதமரின் கல்வி குறித்து அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு இல்லையா? அவரது சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது?'' என பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014 முதல் தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இவரது படிப்பு விஷயம் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
பிரதமர் மோடி 1978 ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பையும், 1983ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்ததாக கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
இருப்பினும் ஆம்ஆத்மி உள்பட பல எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பின் மீது சந்தேகம் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி படித்தது உண்மையா? இல்லையா? என்பதை அறிய ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்தார்.

உத்தரவிட்ட தகவல் ஆணையம்
இதையடுத்து அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை தகவல் ஆணையம் மூலம் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு தொடர்பான சான்றிதழ்களை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி குறித்த சான்றுகளை வழங்க தலைமை தகவல் ஆணையம் கடந்த 2016ல் உத்தரவிட்டது.

ரூ.25 ஆயிரம் அபராதம்
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தை குஜராத் பல்கலைக்கழகம் நாடியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி நீதிபதி பீரன் வைஷ்ணவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த அவர் பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தை 4 வாரத்தில் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கெஜ்ரிவால் கேள்வி
இந்நிலையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‛‛பிரதமரின் கல்வி குறித்து அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு இல்லையா? பிரதமர் ஏன் நீதிமன்றத்தில் தனது பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட மறுத்துவிட்டார்? அவரது சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது? படிப்பறிவில்லாத அல்லது குறைவான கல்வியறிவு பெற்ற பிரதமர் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications