மணிப்பூர் எல்லையில் ஆற்றில் மிதந்த 3 பேரின் உடல்கள்.. காணாமல் போன மெய்தி இன மக்களா? தொடரும் பதற்றம்!
டெல்லி: குக்கி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நிவாரண முகாமில் இருந்து பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மாயமாகினர். காணாமல் போன ஆறு பேரில் மூவர், மணிப்பூர் அசாம் எல்லைக்கு அருகே பராக் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்த்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஜிரிபம் பகுதியில் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து வந்தனர். ஜிரிபாம் மாவட்டத்தில் அண்மையில் பாதுகாப்புப் படையினர் - ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு சி.ஆர்.பி.எஃப் படை முகாம் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மெய்தி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் மாயமாகினர். 3 பெண்கள் மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகள் மாயமாகினர். அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. காணாமல் போன 6 பேரையும் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் தேடி வந்தனர்.
அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 2 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. முதியவர்கள் இருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், மெய்தி மக்களின் வீடுகளை தீயிட்டு எரிக்கும்போது 2 முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
மேலும், காணாமல் போனவர்களை தேடி வந்த நிலையில், ஜிரிமுக் என்ற தொலைதூர கிராமத்தில் பராக் என்ற ஆற்றின் அருகே ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள், முகாமில் இருந்து மாயமானவர்கள் எனக் கூறப்படுகிறது. மற்ற இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவரவில்லை.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆற்றில் கிடந்த உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவை நேற்று மாலை பிரேத பரிசோதனைக்காக அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விரைவில் அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications