மதுபான கொள்கை ஊழல் புகார்..சிறை.. தேர்தல்..ஜாமீன்! ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த அரசியல்
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதேபோல சிபிஐ-யும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, அங்கேயே வைத்து அதிரடியாக கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் வெளியே வருவதில் தொடர் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 26ம்தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமனறத்தில் ஆஜராகி சிபிஐ-ன் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் மறுபு்பு தெரிவித்திருந்தார்.
இப்படியாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. "ஒரு வழக்கில் ஒரு நபரிடம் விசாரணை நடத்துவது என்பது கைதுக்கு தான் வழி வகுக்கும் என்பதை ஏற்க முடியாது. ஜாமீனில் வெளியில் இருப்பதற்கும், விசாரணையை நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்ட விதிகளின் கீழ் கவலை அளிக்கிறது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கில் கடந்து வந்த பாதைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
* 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது.
* 2022ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
* 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன.
* 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.
* 2023 ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி புதிய மதுபான கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வருக்கு அமலாக்கத்துறை முதல் சம்மனை அனுப்பியது.
* 2023ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி கெஜ்ரிவால் முதல் சம்மனை கண்டுக்கொள்ளாமல், அரசியல் பேரணியில் உரையாற்றுவதற்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்ராலிக்கு சென்றார்.
* 2023ம் ஆண்டு டிசம்பர் 21 மற்றும் 2024 ஜனவரி 3 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மேலும் இரண்டு சம்மன்களை அனுப்பியது. ஆனால், இந்த சம்மன் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.
* 2024ம் ஆண்டு ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ED மேலும் இரண்டு சம்மன்களை அனுப்பியது. இதையும் அவர் புறக்கணித்தார்.
* 2024 பிப்ரவரி மாதம் 3ம் தேதி, சம்மன்களைத் தவிர்த்ததற்காக கெஜ்ரிவாலுக்கு எதிராக ED மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியது.
* 2024 பிப்ரவரி 7ம் தேதி, ED புகாரில் கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
* 2024 பிப்ரவரி 19, பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் கெஜ்ரிவாலுக்கு ED சம்மன் அனுப்பியது.
* 2024 மார்ச் 7ம் தேதி கெஜ்ரிவாலுக்கு எதிராக ED இன் புதிய புகாரின் பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
* இதே மார்ச் மாதத்தில், ED சம்மன்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். தன்னைக் கைது செய்யும் நோக்கத்துடனேயே சம்மன் அனுப்பப்பட்டிருப்பதால், அமலாக்க துறை முன் ஆஜராகப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
* 2024 மார்ச் 21ல் கெஜ்ரிவாலை வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை அனுகினார்.
* 2024 மார்ச் 21ல் கெஜ்ரிவாலை ED கைது செய்தது. ED-யால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* 2024 ஏப்ரல் 9ல் ED கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* 2024 ஏப்ரல் 10ல் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* 2024 ஏப்ரல் 15ல் கெஜ்ரிவாலின் மனு மீது ஏப்ரல் 24க்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
* ஏப்ரல் 24ல் கெஜ்ரிவால் பணமோசடி செய்ததாகவும், எனவே அவர் குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
* மே 10 அன்று, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
* ஜூன் 1ல் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
* ஜூன் 5ல் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு.
* ஜூன் 20ல் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
* ஜூன் 21ல் கெஜ்ரிவாலின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
* ஜூன் 26ல் சிறையில் வைத்து கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications