கனவா நினைவா.. 'பள்ளம் இல்லாத தேசிய நெடுஞ்சாலை'.. மத்திய அரசு சூப்பர் முடிவு.. நிதின் கட்காரி தகவல்
டெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்வதற்கான கொள்கையை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருவதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
பள்ளம் இல்லாத சாலை என்பது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்குமே கனவாகவே உள்ளது. புதிதாக சாலை அமைத்த ஒரு மாதத்தில் கூட, மழை காரணமாக சாலைகளில் பள்ளம் விழுந்துவிடுகிறது. மெகா சைஸ் பள்ளங்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வோர் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. விபத்துகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பள்ளம் இல்லாத சாலைகள் அமைக்க வேண்டும். அதுவே எல்லா பிரச்சனைக்கும் பெரிய தீர்வாக அமையும் என்கிற நிலை உள்ளது.

இந்த சூழலில் பள்ளம் இல்லாத சாலைகளை உருவாக்க விரும்பும் மத்திய அரசு, அதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை இந்த ஆண்டு டிசம்பருக்குள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், மழைக் காலங்களில் சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகின்றன. இதற்கு தீர்வு காண விரும்பும் மத்திய அரசு, டிசம்பா் மாத இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்யும் வகையில் கொள்கை ஒன்று உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தில் இளம் பொறியாளா்களை இணைத்து வெற்றி பெற விரும்புகிறோம் என்றார்.
இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலர் அனுராக் ஜெயின் பேசும் போது, 1,46,000 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வரைபடத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பள்ளங்களை அகற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோல் இனிமேல் வரப்போகும் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்களுக்கு, பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் (பிஓடி) முறையில் மத்திய அரசு ஒப்பந்தங்களை வழங்க வாய்ப்புள்ளதாம். பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் முறையில் ஒப்பந்தம் செய்தால். நெடுஞ்சாலைகளை மிகவும் நல்ல முறையில் கண்டிப்பாக ஒப்பந்ததார்கள் பராமரித்தாக வேண்டும். அதனால் தான் இந்த முறையை கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.
பொதுவாக இந்தியாவில் BOT, EPC, HAM ஆகிய மூன்று முறைகளில் சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.இதில் EPC முறையில் கட்டப்படும் சாலைகளுக்கு சீக்கிரம் பராமரிப்பு தேவைப்படும்.
அதேசமயம் BOT முறையில், அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பராமரிப்புச் செலவை ஒப்பந்ததாரர் தான் ஏற்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக சாலை தரமாக இருக்கும் என்று நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும் இனி வரும் சாலைகளை BOT முறையில் தான் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.
BOT திட்டத்தை பொறுத்தவரை தனியார் முதலீட்டாளர்கள் 20-30 ஆண்டுகள் வரை நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிப்பது, கட்டுமானம் மற்றும் சாலையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள். பின்னர் அந்த சாலைகளை உருவாக்கியவர்கள் பயனர் கட்டணங்கள் அல்லது டோல்கள் மூலம் போட்ட முதலீடுகளை மீட்கிறார்கள்.
ஆனால் EPC திட்டங்களில், நெடுஞ்சாலையை பராமரிக்கவும், அமைக்கவும் ஒப்பந்ததார்களுக்கு அரசு தான் பணம் செலுத்தும். அந்த வகையில் அங்கு சுங்கசவாடி அமைத்தால் அந்த கட்டணம் அரசுக்குத்தான் சேரும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.












Click it and Unblock the Notifications