மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கொடுத்த அறிவுரை
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை உக்கிரமாகி வருகிறது.. ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி பழங்குடியினர் 6 பேரின் உடல்கள் ஜிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வன்முறை மீண்டும் வெடிக்க காரணமாகி உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண பிடிவாதத்தை கைவிட்டுவிட்டு, உடனடியாக பிரதமர் மோடி அங்கு செல்ல வேண்டும் என்றும் ப சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி பழங்குடியினர் 6 பேரின் உடல்கள் ஜிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. சனிக்கிழமை அன்று ஏற்பட்ட கலவரத்தில், இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது கலவரக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினார்கள்.. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் தற்போது மிகவும் அசாதாரண நிலை இருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோல் அங்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.

மணிப்பூரின் பல்வேறு இடங்களில் மெய்தி பழங்குடியினர், அவர்களது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன்பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கூடுதலாக 50 பட்டாலியன் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் "மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, "மணிப்பூர் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவேண்டும். மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மணிப்பூருக்கு செல்ல மட்டும் நேரமில்லையா?. வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்று கூறினார்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறும் போது, மணிப்பூரில் மேலும் 5000 மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல.. மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்சனைக்கு காரணம் என ஒப்புக்கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல். உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோக, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும்..
பிரதமர மோடி பிடிவாதத்தை விட்டு மணிப்பூருக்கு சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும்" இவ்வாறு ப சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications