தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. நாளை வரும் ‘தீர்ப்பு’.. ஷிண்டே பதவி தப்பிக்குமா? மகா. அரசியலில் பரபர!
டெல்லி : மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், இந்த அரசு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜக ஆதரவுடன் புதிய கூட்டணி அரசை அமைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆனார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார்.
இதற்கிடையே, கட்சியின் கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்களான ஷிண்டே உள்ளிட்ட 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலிடம், உத்தவ் தாக்கரே சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நர்ஹரி ஜிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து நோட்டீஸ் அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : இந்த நோட்டீஸை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பாக ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். அந்த மனுவில், துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மனு தொடர்பாக துணை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்தும், ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உத்தவ் தாக்கரே. இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருப்பதன் அடிப்படையில், கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்குச் சென்றது.
நாளை தீர்ப்பு : இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உத்தவ் தாக்கரே அணிக்காக வாதிட்டனர். ஹரிஷ் சால்வே, நீரஜ் கவுல் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவுக்காக வாதாடினர்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கு விசாரணை, வாத பிரதிவாதங்கள் முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
என்ன நடக்கும்? : ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு எதிராக துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் எடுத்த தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர்களின் பதவி பறிபோகும். மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதன் தொடர்ச்சியாக, பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படலாம். மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழக்கூடும். எந்தப் பக்கம் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களோ அவர்கள் அரசு அமைக்க உரிமை கோருவார்கள்.
அரசுக்கு சிக்கல்? : மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மை பெற 145 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது பாஜகவின் 105 எம்.எல்.ஏக்கள், ஷிண்டே அணியின் 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் உதிரிகள் என கூட்டணி அரசுக்கு 162 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
ஒருவேளை ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இந்த எண்ணிக்கை 146 ஆக குறையும். அரசுக்கு பெரும்பான்மை இருந்தாலும், கட்சி தாவல் போன்ற விஷயங்களால் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, நாளைய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications