டிக்கெட் கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
டெல்லி: டிக்கெட் கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு அதை ரத்து செய்ய விரும்பினால் ஆன்லைனில் ரத்து செய்துவிட்டு அசல் டிக்கெட்டை காட்டி, பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்ல நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஒத்து போக கூடியது ரயில் பயணங்கள்தான். இதில்தான் குறைந்த டிக்கெட்டில் செல்லலாம். மேலும் வேகமாகவும் செல்வதால் பயண அலுப்பு தெரியாது.

வசதி படைத்தவர்கள் விமானம் மூலம் கூட செல்லலாம். ஆனால் அதில் வசூலிக்கப்படும் கட்டணத்தை எல்லோராலும் கொடுத்து பயணிக்க முடியாது. இதனால்தான் ஏழை எளிய நடுத்தர மக்கள் ரயில் பயணத்தை நாடுகிறார்கள்.
பொதுவாக முக்கியமான இடங்கள், சுற்றுலா தலங்கள், பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்கள், தொழில் நகரங்களுக்கு ரயில் டிக்கெட் என்பதை 3 மாதங்களுக்கு முன்பே புக் செய்து வைத்துக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் டிக்கெட் நிரம்பி விடும்.
பிறகு தட்கலில் புக்கிங் செய்யலாம். ஆனால் அதில் கூட கிடைக்குமா என்பது உறுதி இல்லை. பெரும்பாலானோர் இணையதளத்திலும் டிக்கெட் கவுன்ட்டர்களிலும் போய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு வாங்கும் போது சில சமயங்களில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் (waiting list). 1 முதல் 10க்குள் என்றால் கால இடைவெளிக்கேற்ப டிக்கெட் கன்பார்ம் ஆகிவிடும். இல்லாவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிப்பது கடினமாக இருக்கும்.
இதனால் இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு டிக்கெட் கன்பார்ம் ஆகாவிட்டால் அதை கேன்சல் செய்து விடுவார்கள். ஆனால் டிக்கெட் கவுன்ட்டரில் எடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநிலங்களவையில் பாஜக எம்பி மேத்தா விஷ்ரம் குல்கர்னி என்பவர் கேள்வி எழுப்பினார்.
அதாவது ரயில் புறப்படுவதற்கு முன்பாக கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்ய வேண்டி இருப்பதால் இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம்.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது 139 எண்ணுக்கு அழைத்தோ கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்ததும் அந்த அசல் டிக்கெட்டை கொண்டு போய் முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்தால் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications