"தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த அநீதி?" புள்ளி விவரங்களுடன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய திருச்சி சிவா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து புள்ளி விவரங்களுடன் பேசிய திருச்சி சிவா, மத்திய அரசை விமர்சித்துப் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றினார். தொடர்ந்து கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 Trichy Siva in Parliament says that injustice is being done to Tamil Nadu

திருச்சி சிவா: அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய திருச்சி சிவா, "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு மாநிலங்களில் அவர் நியமித்த ஆளுநர்களைப் போல இல்லாமல், அரசின் உரையை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே வாசித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.. மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது.. பெண்களுக்கு எதிரானது.. சிறு குறு தொழில் செய்வோருக்கு எதிரானது.. கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களும் எதிரானது. மாநிலங்களுக்கு எதிராகவே இருக்கிறது. இதை எல்லாம் சொல்வதால் நான் மத்திய அரசு மீது ஆதாரமற்ற தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறேன் என்று பொருள் இல்லை.

அநீதி: இந்த அரசு மத்தியில் ஆட்சியை அமைத்த பிறகு, மாநிலக் கட்சிகளையும் உள்ளூர் பிரச்சினைகளையும் அழிக்க அப்பட்டமான முயற்சி நடக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மை உடன் தான் நடத்துகிறார்கள். நிதி பகிர்வை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆணையத்தின் பரிந்துரையைக் காட்டிலும் குறைந்த அளவே நிதியைத் தருகிறார்கள். முதலில் 34%ஆக இருந்து பிறகு 31.3%ஆக குறைத்தார்கள். இப்போது அது மேலும் குறைந்து 25%ஆக இருக்கிறது. மாநிலங்களுக்குத் தரப்படும் நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

நேரடி வரி வசூலில் தமிழகம் தான் இந்த நாட்டிற்கு அதிக பங்களிப்பைத் தருகிறது. நாங்கள் மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் தமிழ்நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. எதற்காகத் தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி.

தமிழகத்திற்கு இழப்பு: அனைத்து மாநிலங்களும் ஒன்று எனச் சொல்கிறார்கள்.. பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. ஜிஎஸ்டி வரி முறையால் தமிழகத்திற்கு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவசர அவசரமாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியதே இதற்குக் காரணம்.

ஒரு மாநிலத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அம்மாநில மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும். ஆனால் இப்போது ஆளுநர் மாளிகை தடையாக இருக்கிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படுவதில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் உள்ளே புகுந்து மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள்.

நிதி தருவதில்லை: சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் மற்றும் அதீத மழையால் சென்னை மற்றும் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நாங்கள் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி கேட்டோம். ஆனால் வெறும் ரூ. 450 கோடியை மட்டுமே தந்தார்கள். பிறகு விரிவான ஆய்வுக்குப் பிறகு வெள்ளத்தால் ஏற்பட்ட தேசங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.. ஆனால், இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

பேரிடர் ஏற்படும் சமயங்களில் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லை.. கூட்டாட்சி முறையில் மத்திய அரசில் இருப்பவர்கள் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. இதன் காரணமாகவே நான் மத்திய அரசு கூட்டாட்சி முறைக்கு எதிரானவர்கள் என்கிறோம். அண்டை மாநிலமான ஆந்திராவிலும் சிறப்பு அந்தஸ்து தராமல் இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் இப்படி நடத்துவது சரியான போக்கு இல்லை.

சிஏஏ: குடியுரிமை மசோதாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதில் முஸ்லிம்களை விடப்பட்டது ஏன்? இலங்கை விடப்பட்டது ஏன்? ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் சுமார் 1.5 லட்சம் இந்தியாவில் இருக்கிறார்கள். இதுவரை அவர்களுக்குக் குடியுரிமையை வழங்கவே இல்லை. மேலும், முத்தலாக் சட்டத்தைக் கொண்டு வரும் இந்த அரசு கைம்பெண்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறதே அதற்கு என்ன காரணம்.. மேலும், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்?" என்று கேள்விகளை எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+