அஞ்சல் துறையின் அதிரடி.. டிரம்ப் போட்ட 50% வரி.. அமெரிக்காவுக்கான தபால் சேவையை நிறுத்திய மத்திய அரசு
டெல்லி: இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. சுங்க வரிகளில் செய்யப்பட்ட மாற்றத்தையடுத்து, இந்த சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக, முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ட்ரம்ப் சமீபத்தில் இந்தியா மீது 25 சதவீத வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

50% வரிவிதிப்பு
இதையடுத்து, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 100 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு பிறப்பித்த நிர்வாக உத்தரவிலும் கூறப்பட்டிருந்தது.. இந்த உத்தரவானது வரும் 29ம் தேதி அமலுக்கு வருகிறது.
இதுவரை 800 டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு எந்த சுங்க வரியும் கிடையாது. இதையடுத்து, அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல மறுத்துள்ளன. எனவே இன்று முதல் இந்திய அஞ்சல் துறை மூலம் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் சேவை நிறுத்தம்
இப்படிப்பட்ட சூழலில், அஞ்சல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், "அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டத்தின் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25 க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கடிதங்கள்/ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது
கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் $100 வரையிலான பரிசுப் பொருட்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு உண்டு. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல் துறை வருத்தம் தெரிவிக்கிறது. அமெரிக்காவிற்கான முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன..
மீண்டும் எப்போது சேவை
தனியார் கொரியர் நிறுவனங்களுடனான தற்காலிக உறவுகளை அஞ்சல் சேவை இன்னும் ஆராயவில்லை.. ஏற்கனவே அனுப்ப முடியாத பார்சல்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், சேவைகளை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அஞ்சல் துறை அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
வரிசையாக நிறுத்தப்பட்ட சேவைகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததையடுத்து, 2 நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் நிலவி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், சுங்க வரிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது, அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
ஏற்கனவே, செக் குடியரசு நாடு கடந்த வாரம் முதல் அமெரிக்கப் பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது. ஆஸ்திரியாவின் அஞ்சல் சேவையும், அமெரிக்காவிற்குச் செல்லும் பார்சல்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளது.. , பெல்ஜியம் நாட்டிலும், அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா போஸ்ட் அதன் போக்குவரத்து சேவை விநியோகங்களை நிறுத்தியுள்ளது
அதேபோல, புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறும்போது, அடுத்த வாரம் 2 நாட்களுக்கு ஏற்றுமதிகளை நிறுத்தி வைக்க இங்கிலாந்தின் ராயல் மெயில் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications