டிரம்ப்பால் இந்தியா சந்திக்கும் பெரும் பின்னடைவு.. 70 வருஷமாக நிதி தந்த அமைப்பை முடக்கி அதிர்ச்சி
டெல்லி: டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் "அமெரிக்காவின் அனைத்துலக மேம்பாட்டு முகமை" (USAID) நிதியை முடக்கியதால், இந்தியாவின் சுகாதாரம், கல்வி, குடிநீர், சுகாதாரம், உணவு பாதுகாப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், டிரம்ப் வெளிநாட்டு உதவிகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து USAID-யால், இந்தியாவில் செயல்படும் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
டெஸ்லா நிறுவனர் மற்றும் ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர் எலான் மஸ்க், "USAID என்பது ஒரு குற்ற நிறுவனமாகும். அதை உடனே மூட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இதனை ட்ரம்பும் ஆதரித்துள்ளதாக மஸ்க் கூறினார். ட்ரம்ப் சமீபத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "USAID ஒரு வலதுசாரி தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது," என்று விமர்சித்தார்.

இந்தியாவில் USAID நிதி
USAID கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு ஆண்டுக்கு 140 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறைக்கு மட்டும் $55 மில்லியன், கல்விக்காக $6.8 மில்லியன் உள்ளிட்டவை உள்ளன. குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது, காசநோய், எய்ட்ஸ், கோவிட்-19 போன்றவற்றில் USAID இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றியது. 1990 முதல் இந்தியாவில், 20 லட்சம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. "படே பாரத்" கல்வி திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு இவ்வமைப்பு உதவியோடு உதவி செய்யப்பட்டது. ஸ்வச் பாரத் திட்டத்தில் 3 லட்சம் குடும்பங்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்பட்டன. 1.32 லட்சம் விவசாயிகள் USAID தொழில்நுட்ப உதவியால் விளைச்சல் அதிகரித்துள்ளனர்.
USAID வலைத்தளம் மூடப்படுகிறது
டிரம்ப் உத்தரவின்படி, USAID உட்பட 350 அமெரிக்க அரசு வலைத்தளங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டன. இது தற்காலிகமா அல்லது நிரந்தரமா எனத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைப்பின் வரலாற்றுப் பின்னணி
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜார்ஜ் மார்ஷல் திட்டம் மூலம் ஐரோப்பாவுக்கு உதவிய USAID, 1961-ல் ஜான் எஃப். கென்னடியால் நிறுவப்பட்டது. 130 நாடுகளில் $40 பில்லியன் நிதியை வழங்கியுள்ளது. USAID நிதி நிறுத்தம் இந்தியாவின் முக்கியத் துறைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அச்சம் உள்ளது. இந்திய அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகள் மாற்று நிதி ஆதாரங்களைத் தேட வேண்டியிருக்கலாம். இதற்காக வரி விதிப்பு அதிகரிக்கப்படலாம். USAID இன் சுமார், 70-ஆண்டு பங்களிப்பை தவற விடுவது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications