எனக்கு குக்கர் சின்னம் தான் வேணும்.. திருவாரூர் தொகுதிக்காக சுப்ரீம் கோர்ட்டை நாடிய டிடிவி தினகரன்
டெல்லி:திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி, கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு குறித்து சட்டசபை அலுவலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எப்போது தேர்தல் நடைபெறும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் வரும் 28ம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
இதற்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே போன்று, திருவாரூர் தொகுதியிலும் குக்கர் சின்னத்தை வைத்து வெற்றி பெற டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications