வசமாக சிக்கிய துருக்கி.. பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் மட்டுமின்றி.. வீரர்களையும் அனுப்பி உதவியது அம்பலம்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலில் துருக்கி ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே ட்ரோன்கள் மட்டுமின்றி வீரர்களையும் கூட பாகிஸ்தானுக்குத் துருக்கி அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களில் இருவர் இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் இருந்தது. அப்போது பெரும்பாலான உலக நாடுகள் மவுனமாகவே இருந்தன. சில நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், துருக்கி மற்றும் அஜர்பைஜான் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. அதிலும் குறிப்பாகத் துருக்கி ராணுவ ரீதியாகவும் உதவியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

துருக்கி வீரர்கள்
இதற்கிடையே இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் துருக்கி செய்தி உதவி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மீதான தாக்குதலுக்கு உதவும் வகையில் பாகிஸ்தானுக்கு சுமார் 350+ ட்ரோன்களை துருக்கி அனுப்பியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ட்ரோன்களை அனுப்பியது மட்டுமின்றி, தனது சில வீரர்களையும் ட்ரோன்களை ஆபரேட் செய்யத் துருக்கி அனுப்பியதாம். இந்தியா நடத்திய தாக்குதலில் துருக்கி வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மீதான தாக்குதலுக்கு ட்ரோன்கள் அனுப்பி உதவியது மட்டுமின்றி, ஆபரேட்டர்களையும் அனுப்பி உதவியுள்ளது தெரிய வந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா மீதான பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அந்த ட்ரோன் தாக்குதல்களை ஒருங்கிணைக்கப் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்குத் துருக்கி ஆலோசகர்கள் உதவியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறியடித்த இந்தியா
இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் Bayraktar TB2 மற்றும் YIHA ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ட்ரோன்கள் மூலமாகவே இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றுள்ளது. இது முக்கிய தளங்கள் அல்லது நகரும் வாகனங்களைக் கூட தாக்கும். ஆனாலும், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கி பாகிஸ்தான் உறவு
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா துருக்கி இடையேயான உறவு நெருக்கமடைந்து கொண்டே வருகிறது. உலக நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. துருக்கி அரசு ராணுவ வன்பொருள்களை வழங்குவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பயிற்சியையும் நடத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் இருந்து துருக்கி செல்லும் ஏற்றுமதி அதிகரித்த நிலையில், அதை வைத்தே துருக்கி ட்ரோன் தயாரிப்பைப் பல மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. அலுமினியம், ஆட்டோ பாகங்கள், விமானம், தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் மின் இயந்திரங்கள் என ட்ரோன் உற்பத்தியைக் குறிவைத்தே துருக்கி தனது ஏற்றுமதிகளை அதிகரித்து வந்துள்ளது.
இந்திய ராணுவம்
முன்னதாக தாக்குதல் நடந்த போது செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷி ஆபரேஷன், "பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களின் சிதைவுகள் குறித்து தடயவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆரம்ப சோதனைகளை வைத்துப் பார்த்தால் அவை துருக்கியைச் சேர்ந்தது போலத் தோன்றுகிறது. இந்திய பாதுகாப்புப் படைகள் அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்திவிட்டது" என்று கூறியிருந்தார்.
கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் வெற்றியைப் பொறுக்க முடியாத பாகிஸ்தான், இந்தியாவின் பல எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications