ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தவெக மனு!
டெல்லி: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் நடந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நெல்லை ஐ.டி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ஆணவ படுகொலையை தடுக்கும் தனிச் சட்டத்தை இயற்றுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுக்கவும் அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் விரைந்து முடிக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி இருந்த நிலையில் அது முறையாக பின்பற்றப்படவில்லை. ஆணவப் படுகொலைகளை தற்போதைய சட்டங்களால் உறுதியாகத் தடுக்க முடியாத நிலை உள்ளது.
ஆகவே ஆணவக் கொலைகளுக்கு என தனியாக ஒரு சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications