கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரிய மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால்.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: கரூர் விவகாரம் தொடர்பான மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய மனுத்தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உண்மையாக இருக்கும் பட்சத்தில் கருத்தில் கொள்வோம் என்றும் தெரிவித்தது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்தனர். இதில் 11 வயதான பிரித்திக்கும் ஒருவர். இவரது தந்தை பன்னீர் செல்வம் மற்றும் தாய் ஷர்மிளா. இந்த நிலையில் பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக ஷர்மிளா பேசுகையில், பிரித்திக் எனது மகன்தான். எனது கணவர் பன்னீர்செல்வம் வழக்கு போட்டது எனக்கு தெரியாது. அவர் பணத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார். எனது மகனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூடவில்லை. மகனின் இறுதிசடங்கிற்கு கூட வரவில்லை. அவர் என்னை விட்டுச்சென்று 8 ஆண்டுகளாகிவிட்டது என்று தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு தாய் ஷர்மிளா ஆஜராகினார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றியதோடு, அதனை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முறையிடப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மோசடியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கருத்தில் கொள்வோம். மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால், அதனை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications