பாஜக அல்ல.. காங்கிரஸ் கட்சியின் முக்கிய வழக்கறிஞரை சந்தித்த ஆதவ் அர்ஜுனா.. என்ன நடந்தது?
டெல்லி: தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜக பக்கம் செல்ல தவெக விரும்பவில்லை என்பதால், காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக தலைமையிடம் பேச முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யிடம் ராகுல் காந்தி நேரடியாக பேசி இருந்தார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நடந்து ஒரு வார காலமாகியும், விஜய் இதுவரை கரூர் பக்கமே செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு வருத்தமோ அல்லது உயிரிழந்தவர்களுக்காக ஒரு இரங்கல் கூட்டமோ கூட அறிவிக்கவில்லை. இவ்வளவு ஏன், அவர்களின் புகைப்படத்திற்கு ஒரு அஞ்சலியை கூட செலுத்தவில்லை.

அதுமட்டுமல்லாமல் தவெக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகி இருக்கின்றனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி, இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன், மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாக உள்ளனர். விஜய்யும் கூட தனது வீட்டை விட்டு வெளியேற வரவில்லை.
இதனால் நீதிமன்றம் தவெகவை பார்த்து, இது என்ன மாதிரியான கட்சி.. விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என்று கடுமையாக சாடியது. இந்த சூழலில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பறந்தார். தனி விமானத்தில் கமாண்டோ பாதுகாப்புடன் சென்ற ஆதவ் அர்ஜுனா, பாஜகவின் முக்கியத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா நேற்று உத்தராகண்டில் தொடங்கிய தேசிய சப் ஜுனியர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார். இதன்பின் நேற்று மாலையே ஆதவ் அர்ஜுனா டெல்லி திரும்பிவிட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆதவ் அர்ஜுனா சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் உதவியை நாடினால், அது தேர்தலின் போது பின்னடைவை உருவாக்கும் என்று தவெக பார்க்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியிலும் உரையாடி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் உதவியை நாடி, திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தவெக கணக்கிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே தவெக சார்பாக உச்சநீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வக்பு வாரிய திருத்த மசோதா வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிக்வி தான் வழக்கறிஞராக செயல்பட்டார். இதனால் மீண்டும் அவரை சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் சிக்கல் உருவாகி இருப்பதால், அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications