நாளை டெல்லி செல்கிறார் விஜய்.. சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்.. போலீசாரிடம் பாதுகாப்பு கேட்கும் தவெக!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக, டெல்லி காவல்துறைக்கு மனு அளித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்காக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வருமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. CBI விசாரணையை உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.

டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தோர், தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், கரூர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கரூருக்கு விஜய்யின் பிரசார பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு நாளை ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.
விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது பற்றியும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நாளை திங்கள்கிழமை (ஜனவரி 12) விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல்துறையிடம் தவெக மனு அளித்துள்ளது. விஜய் தங்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications