நிஜ “ஆயிஷா” யார்? அதே பெயர், அதே ஊர், அதே ரோல் நம்பர்.. யுபிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே முதல் முறை
டெல்லி: நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் ஒரே பெயர் கொண்ட 2 தேர்வர்கள் 184 வது ரேங்கில் பெற்ற மதிப்பெண்ணை தங்களுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 933 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தரவரிசைப் பட்டியலை நேற்று யுபிஎஸ்சி வெளியிட்டது. அதில் 184 வது இடத்தை ஆயிஷா என்ற பெண் பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மதிப்பெண்ணுக்கு ஆயிஷா என்ற பெயர் 2 பெண்கள் உரிமைகோரி வருகிறார்கள்.

184 வது மதிப்பெண்ணுக்கு உரிமைகோரும் 2 பெண்களுமே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். தேர்வு முடிவுகள் வெளியான உடனே தாங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டதாக கூறி 2 பெண்களும், குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஆயிஷா ஃபாத்திமா என்ற பெண் திவாஸ் பகுதியை சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் நஜீருத்தீன்.
மற்றொருவரின் முழு பெயர் ஆயிஷா மக்ரானி. அவரது தந்தை பெயர் சலீமுத்தீன். அவர அலிராஜ்பூரை சேர்ந்தவராவார். இருவருமே தங்களுடைய ரோல் எண் 7811744 என்றே கூறுவதுதான் இங்கு குழப்பத்துக்கு காரணமே. இருவருமே தாங்கள் தேர்வு எழுதியதாகவும், நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து ஆயிஷா மக்ராணியின் சகோதரர் சஹாபுத்தீன் தெரிவிக்கையில், "எனது தங்கை இந்த கடினமான தேர்வில் வெற்றிபெற மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது 184 வது ரேங்கை எடுத்து உள்ளார். தேர்வில் எனது தங்கை வெற்றிபெற்றார் என்பதை நிரூபிக்க நீதிமன்றம் வரை கூட செல்வதற்கு தயாராக உள்ளோம்." என்றார்.

அதேபோல் ஆயிஷா ஃபாத்திமாவின் தந்தை நஜீருத்தீனோ, "எனது மகள் யாரோ ஒருவர் செய்த தவறால் பாதிக்கப்பட்டு உள்ளார். விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்." என்றார். இருவரது நுழைவு அட்டைகளை பார்த்தபோது ஆயிஷா மக்ரானியின் அட்டையில் நுழைவுத் தேர்வு வியாழக்கிழமை நடந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல் ஆயிஷா பாத்திமாவின் நுழைவு அட்டையில் நுழைவுத் தேர்வு செவ்வாய்கிழமை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. உண்மையில் செவ்வாய்கிழமைதான் நுழைவுத் தேர்வு நடைபெற்று இருக்கிறது. அதேபோல் ஆயிஷா பாத்திமாவின் நுழைவு அட்டையில் UPSC ரகசிய குறி (Water Mark) உள்ளது. ஆயிஷா மக்ராணியின் நுழைவு அட்டையில் ரகசிய குறி இல்லை.

இரண்டையும் வைத்து பார்க்கையில் திவாஸ் பகுதியை சேர்ந்த நஜீருத்தீன் என்பவரது மகள் ஆயிஷா ஃபாத்திமாவின் நுழைவுச் சீட்டே உண்மை என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், இது தொடர்பாக யுபிஎஸ்சி எந்த முடிவையும் அறிவிக்காததால் குழப்பம் தொடர்ந்து வருகிறது. நாட்டின் மிக முக்கிய தேர்வாக கருதப்படும் யுபிஎஸ்சி வரலாற்றிலேயே இதுபோன்ற குழப்பம் ஏற்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications