இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு 4 மாதம் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!
துபாய்: இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை செப்டம்பர் வரை 4 மாதம் நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
உலகில் சீனாவுக்கு அடுத்த படியாக கோதுமை உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து ஏராளமான நாடுகளுக்கு கோதுமை, கோதுமை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் மத்திய கிழக்கு நாடுகளும் அடங்கும்.
இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லாததால் இந்தியா கடந்த மாதத்தில் கோதுமை ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது. இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

கோதுமை தட்டுப்பாடு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த 2 நாடுகளும் அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்கின்றன. உலகளவில் நடக்கும் கோதுமை ஏற்றுமதியில் 25 சதவீத பங்கை இந்த நாடுகள் தான் செய்கின்றன. போர் காரணமாக இருநாடுகளின் கோதுமை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30க்கும் அதிகமான நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு உள்ளது. இதனால் அனைவரின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆனால் இந்தியாவில் கோதுமை அறுவடை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் கடந்த மாதம் கோதுமை ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.

ஏற்றுமதிக்கு 4 மாதம் தடை
இந்நிலையில் தான் இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் திடீரென்று தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் திடீரென்று உத்தரவிட்டுள்ளது.

உணவு பாதுகாப்புக்காக...
பொதுவாக ஐக்கிய அரபு அமீரகம் இந்திய கோதுமையை இறக்குமதி செய்து அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய கோதுமை தட்டுப்பாட்டால் இந்தியாவில் இருந்து பெறப்படும் கோதுமையை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அதாவது உணவு பொருள் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதனை ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளது.

அனுமதி கட்டாயம்
மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தடையின் காரணமாக இந்தியாவில் இருந்து கிடைக்கும் கோதுமையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பொருளாதார அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்தின் படி...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையே கடந்த பிப்ரவரியில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இருநாடுகள் இடையேயான பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி வரிகளை குறைக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் இருநாடுகள் இடையேயான வருடாந்திர வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் தான் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கூட ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்நாட்டு நுகர்வோருக்காக கோதுமையை இந்தியா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்(மே) 14ல் இந்தியா திடீரென்று கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தாலும் கூட தற்போது வரை 469,202 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications