சனாதனம் பத்தி பேசுனா என்ன நடக்கும்னு நல்லாவே தெரியும்.. சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் வாதம்!
டெல்லி: சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பு இன்று பதில் அளித்தது. மேலும், தான் பேசியதன் விளைவுகளை நன்கு அறிவேன் என்றும் விசாரணையை எதிர்கொள்ள தயார் என்றும் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் காமராஜர் அரங்கில் தமுஎகச சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா, கோரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்" என்று பேசினார்.

உதயநிதிக்கு எதிராக கொந்தளிப்பு: டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்தியா கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றுள்ள தலைவர்களில் சிலரும் கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் பற்றிய பேச்சு தொடர்பாக பெங்களூர், பாட்னா, மும்பை, ஜம்மு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று: சனாதன தர்மம் விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதிக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து சுதந்திரத்திற்கான சட்ட விதிகள் 19 மற்றும் 25 பிரிவுகளை தவறாகப் பயன்படுத்திய பின்னர், தாங்கள் பேசியதன் விளைவுகள் என்ன என தெரிந்ததும் நீதிமன்றத்தை நாடியுள்ளது ஏன் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தாங்கள் பேசியது தவறு என உணர்ந்திருக்க வேண்டும் என்றும் தாங்கள் சாதாரண மனிதர் அல்ல, ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்றும் உதயநிதிக்கும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். எங்கெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதோ அங்கே செல்லுங்கள் என்றும் அந்த மாநில உயர்நீதிமன்றங்களை அணுகுங்கள் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
10 நாட்களில்.. 2வது முறையாக இன்று தமிழ்நாடு வரும் மோடி.. சென்னையில் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டம்
உதயநிதி ஸ்டாலின் தரப்பு பதில்: இதையடுத்து, சனாதன தர்மம் தொடர்பான வழக்கில் வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை, மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.
“நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்” என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
உதயநிதி தரப்பு வாதம்: மேலும், பத்திரிகையாளர்கள் அர்ணாப் கோஸ்வாமி, முகமது ஜுபைர், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஆகியோருக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றம் அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்குகளாக மாற்றி இருந்தது. அதேபோல சனாதனம் தர்மம் குறித்த பேச்சுக்கு எதிரான வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், பெங்களூரில் தனக்கு எதிராக பதிவாகியுள்ள வழக்கில் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், இதையடுத்து, இந்த வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கலாகி உள்ளதா என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications