இடஒதுக்கீட்டை ரத்து பண்ணுங்க, வன்கொடுமை சட்டத்தை நீக்குங்க.. டெல்லியில் ஓசி பிரிவினர் போராட்டம்
டெல்லி: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் திருத்தங்களைக் கோரியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய சமத்துவ விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் திரண்டு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொதுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு பெரும் அழுத்தமாகப் பார்க்கப்படுகிறது.
இடஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்து வரும் பொதுப்பிரிவினர் சமீபத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றையும் தொடங்கி இருந்த நிலையில்தான் தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் சமீபத்தில் காக்ரோச் ஜனதா கட்சி 45 நாட்களாகத் தொடர்ந்து நடத்திய நீட் போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று பொதுப் பிரிவினர் இடஒதுக்கீடு முறையை எதிர்த்து மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர்.
ரிசர்வேஷன் ரிஃபார்ம் அந்தோலன் என்ற பெயரின் கீழ், நீட் படிக்கும் மாணவர் ஹர்ஷ் துபே தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெனரல் சேனா, சாணக்ய சேனா மற்றும் கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதில் இணைந்து தங்கள் ஆதரவை அளித்தன.
அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள்
இந்த போராட்டத்தை ஜந்தர் மந்தரில் நடத்துவதா அல்லது ராம்லீலா மைதானத்திற்கு மாற்றுவதா என்பதில் டெல்லி போலீசாருக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே பெரும் இழுபறியும் குழப்பமும் நிலவியது. காவல்துறையினர் முதலில் ராம்லீலா மைதானத்திற்கு செல்லும்படி போராட்டக்காரர்களை அறிவுறுத்தியதாகவும், இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பலர் அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து வந்த சுமார் 40 பேர் கொண்ட குழு, முதலில் ராம்லீலா மைதானத்திற்குச் சென்று பின்பு மீண்டும் ஜந்தர் மந்தருக்கே திரும்பி வந்ததாகத் தெரிவித்தனர்.
நாங்கள் ஜந்தர் மந்தரில் போராடவே அனுமதி கேட்டோம். இங்கேயே தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம், தொடர்ந்து இங்கேயே அமர்ந்து போராடுவோம் என்று இடஒதுக்கீடு எதிர்ப்பு குழுவை சேர்ந்த அபிநய் பாண்டே போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். கடைசியில் நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, டெல்லியின் அதிகாரப்பூர்வ போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலேயே போராட்டம் நடத்த காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்குப் பதிலாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். ரிசர்வேஷன் ஹடாவ் மிஷன் அமைப்பைச் சேர்ந்த பிரதீக் பாண்டே கூறுகையில், வறுமையில் வாடும் மக்களுக்கு அரசின் உதவி தேவை என்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.. ஆனால், வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதியின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து அரசின் சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய போராட்டக்காரர்கள், அதையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அமைதியான முறையில் நடந்த இந்த போராட்டத்தில், திரண்டிருந்தவர்கள் அனுமன் சாலிசாவை பாடலை பாடியபடியும், சியாபத் ராமச்சந்திர கி ஜெய் என பக்தி முழக்கங்களை எழுப்பியபடியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பிரதமரிடம் நேரில் மனு
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் துபே பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை நேரில் அளிக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு எங்கும் நகர மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். இடஒதுக்கீட்டின் பலன்கள் உண்மையிலேயே தேவையானவர்களுக்கு மட்டுமே சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கானோர் கூடியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி போலீஸ், அதிரடிப்படை (RAF) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ITBP) வீரர்கள் குவிக்கப்பட்டு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சில போராட்டக்காரர்கள் தடையை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, போலீசார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். மோடியை எதிர்க்கும் மாணவர்களுக்கு 3 மணி நேரத்தில் அனுமதி வழங்கிய காவல்துறை, தேசபக்தர்களுக்கு 30 நாட்களாக அனுமதி மறுத்தது ஏன்? என்று எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் கேள்வி எழுப்பினார்.
இதனை மேற்கோள் காட்டிய இன்போசிஸ் முன்னாள் அதிகாரி மோகன்தாஸ் பை, இந்த பாரபட்சம் மிகவும் தவறானது.. சட்டத்தை மதிக்கும் குடிமக்களைப் புறக்கணித்துவிட்டு அராஜகவாதிகளை ஊக்குவிப்பது ஏன் என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனிக்க வேண்டும் எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், தற்போது மகாராஷ்டிராவின் நாக்பூர், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் என நாட்டின் பல்வேறு வீதிகளிலும் பெரும் போராட்டங்களாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக ராஜஸ்தானில், ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக 24 நாட்களில் 800 கிலோமீட்டர் தூரம் ஜெய்ப்பூரை நோக்கிப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் தங்களது நியாயமான கோரிக்கைகளை விரைவில் பரிசீலித்து நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் நாட்களில் இந்தப் போராட்டம் நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் இயக்கமாக விரிவடையும் எனப் போராட்டக்காரர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
