உஜ்வாலா சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு! அமைச்சரவை கூட்டத்தில் மத்திய ஒப்புதல்
டெல்லி: விரைவில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில் உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு என மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும் எனவே, தனது தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருப்பது கட்டாயமாகியுள்ளது.
எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்கையில் இந்த ஆண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா என 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே இதில் தங்கள் வெற்றி கொடியை நாட்ட பாஜக பல்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகிறது.
முன்னதாக கடந்த 1ம் தேதி தெலங்கானா மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதேபோல ரூ.13,500 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.7,000 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இப்படியாக இந்த மாநிலங்களில் தற்போது பாஜக தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு டெல்லியில் கூடியது. அதில் உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே சமீபத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications