கடும் எதிர்ப்பு.. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கும் மத்திய அரசு? பரபரப்பான தகவல்
டெல்லி: மத்திய அரசு சார்பில் இந்தியாவில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் மத்திய அரசு பின்வாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வருவது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இதற்காக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் தான் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஸ்லிம் அமைப்பினர், எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந்த சட்டம் தேவையில்லாத ஒன்று. இதனால் மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி இதுபற்றி பேசும்போது, ‛‛பொது சிவில் சட்டம் கட்டாயம் தேவை. ஒரு நாட்டை எப்படி 2 வகையான சட்டத்தால் ஆட்சி செய்ய முடியும். பொது சிவில் சட்டம் என்பது யாருக்கும் எதிரானது இல்லை. இதனை எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் சட்ட கமிஷன் சார்பில் கருத்து கேட்பும் 2வது முறையாக நடந்தது. கடந்த மாதம் 14ம் தேதி முதல் நேற்று வரை சட்ட கமிஷனில் ஏராளமானவர்கள் பொது சிவில் சட்டம் குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். மொத்தம் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
சட்ட கமிஷனில் கருத்து சொல்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 28ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பொது சிவில் சட்டம் என்பது மத்திய பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் 21 மசோதாக்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இடம்பெறவில்லை. இதனால் எதிர்ப்புக்கு பணிந்து மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறதா? என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
இருப்பினும் கூட நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே புதிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படலாம். இதனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற இரு சபைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனால் இந்தியாவில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய பொது சிவில் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறதா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications