அடிச்சுத் தூக்கப் போகுது ஐடி.. ஏஐக்கு நல்ல காலம் பொறக்குது! Tax Holiday கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா
டெல்லி: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் தரவு மையங்களை (Data Centres) அமைத்து கிளவுட் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2047ஆம் ஆண்டு வரை வரி விடுமுறை வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை இந்தியா நோக்கி ஈர்ப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.
தரவு மையங்கள் என்பது தற்போது தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கணினி சேவைகள் உள்ளிட்ட துறைகளுக்கு அடித்தளமாக செயல்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் ஹப்பாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்பின் படி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரவு மையங்களை அமைத்து, அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கிளவுட் சேவைகளை வழங்கினால், அவர்களுக்கு 2047 வரை வரி சலுகை வழங்கப்படும். ஆனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் போது, அந்த சேவைகள் கட்டாயமாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ரீசெலர் நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களுக்கும் தொழில்துறையில் கூடுதல் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் அமைக்கப்படும் தரவு மையங்கள் தொடர்புடைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவற்றுக்கு செலவின் அடிப்படையில் 15 சதவீதம் வரை 'சேஃப் ஹார்பர்' சலுகையும் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். இது முதலீட்டாளர்களுக்கு வரி தொடர்பான அபாயங்களை குறைத்து, நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு தொழில்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தரவு மையங்கள் அதிக அளவில் அமைக்கப்படுவதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், மின் உள்கட்டமைப்பு மேம்படும், மேலும் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு டிஜிட்டல் சேவைகள் வழங்கும் திறன் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2047ஆம் ஆண்டு வரை வரி விடுமுறை வழங்கப்படும் இந்த முடிவு, இந்தியாவின் 'வளர்ச்சி அடைந்த நாடு' இலக்கை அடைவதற்கான நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்கு இந்த அறிவிப்பு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications