வங்கதேசத்தை முடித்துவிட்ட இந்தியா.. பட்ஜெட்டில் 50% நிதி குறைப்பு.. ஆப்கானிஸ்தானுக்கு ‛ஜாக்பாட்’
டெல்லி: 2026-27 மத்திய பட்ஜெட்டில் அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காகவும், உதவி மானியமாகவும் ரூ.5,685.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நம்மை சீண்டி வரும் வங்கதேசத்துக்கான நிதி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிகபட்சமாக பூடானுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. புதிய நலத்திட்டங்கள், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டில் நம்முடைய அண்டை நட்பு நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் உதவி செய்யும் வகையில் மானியமாக நிதி வழங்கப்படும்.
வெளியுறவுத்துறைக்கு நிதி
‛Neighbourhood First' என்ற பாலிசி அடிப்படையில் இந்த நிதி ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இந்த நிதி வழங்கப்படும். அதன்படி இந்த பட்ஜெட்டில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மொத்தம் ரூ.22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு நிதி
இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை ஒப்பிடும்போது அதிகமாகும். கடந்த 2025-26 பட்ஜெட்டில் ரூ.20,516 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.22,118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து அண்டை நாடு, நட்பு நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில் உதவி, மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.5,685.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூடானுக்கு அதிக நிதி
இதில் அதிகபட்சமாக பூடானுக்கு ரூ.2,288 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டுக்கும், பூடான் இடையே ஹைட்ரோ பவர், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நிதி வழங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நேபாளத்திற்கு ரூ.800 கோடியும், மாலத்தீவு மற்றும் மொரீஷியஸுக்கு தலா ரூ.550 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை - மியான்மர்
அதேபோல், இலங்கைக்கு ரூ.400 கோடியும், மியான்மருக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி ரூ.225 கோடியாகவும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.120 கோடியாகவும் மாற்றமின்றி தொடர்கிறது. வெளிநாடுகளுக்கான பேரிடர் நிவாரண உதவி ரூ.80 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனுக்கு ரூ.150 கோடி
அதேபோல் ஆப்கானிஸ்தான் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் நம் நாடு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த முறை ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.150 கோடி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு நிதி குறைப்பு
அதேவேளையில் வங்கதேசத்துக்கான நிதி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நம்முடன் நெருங்கிய நட்பு நாடாக வங்கதேசம் இருந்தது. ஆனால் இப்போது வங்கதேசம் நம்மை சீண்டி வருகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி வங்கதேச அரசு நம் நாட்டுக்கு எதிரான பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு வெறும் ரூ.60 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியை ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications